2026க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை : திமுகவின் மாஸ்டர் திட்டம்!

Published On:

| By Kavi

வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது.

அதிமுக திமுக ஆட்சிக் காலங்களில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக அரசு துறையில் பணியமர்த்துவதை காட்டிலும் தனியார் நிறுவனங்களில் வேலையை அதிகரிப்பதில் தான் முனைப்பு காட்டி வருகின்றன.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்துக்கு 82 ஆயிரத்து 256 ஆகும்.

இந்த தரவுகள் படி ஆண்டுக்கு சராசரியாக 8 லட்சம் பேர் வேலை தேடும் இளைஞர்களாக இருக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

2024 மார்ச் நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில்  54.47 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இதில் 25.23 லட்சம் பேர் ஆண்கள். 29.24 லட்சம் பேர் பெண்கள்.

இவர்களில் 19 -30 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23.92 லட்சம் பேரும், 31- 45 வயதுள்ளவர்கள் 17.03 லட்சம் பேரும் உள்ளனர்.

நாட்டில் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நிதி பற்றாக்குறையால் அரசு துறைகளில் பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாமல் ஆள் குறைப்பும் நடந்து வருகிறது.

இப்படி, வேலையின்மை திண்டாட்டம் அதிகரித்தால் இளைஞர்கள் பாதை மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் தமிழக அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (நவம்பர் 16)  ஆவடி அருகே திருநின்றவூர் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 269ஆவது தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் அமைச்சர்கள்  சி.வெ.கணேசன், நாசர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணையும் வழங்கினர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, ஆவடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டதால் கல்லூரி வளாகமே நிரம்பி வழிந்தது.

விழா மேடையில் இருந்த சி.வெ.கணேசனிடம் மின்னம்பலம்.காம் சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக பேசினோம்.

“தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் ஆலோசனைப்படி, படித்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டு 2026க்குள் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்க பாடுபட்டு வருகிறோம்.

முதல் வேலைவாய்ப்பு முகாம் துணை முதல்வர் தொகுதியான சேப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. 100ஆவது வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் கிரசண்ட் கல்லூரியில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்த முகாமில் 75 ஆயிரம் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர். அதில் தேர்ச்சி பெற்ற பல ஆயிரம் இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.
மாநில கல்லூரியில் நடந்த 150ஆவது வேலைவாய்ப்பு முகாமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணை வழங்கினார்.

200ஆவது வேலைவாய்ப்பு முகாம் ராணி மேரி கல்லூரியில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நான் பணி ஆணை வழங்கினேன்.
இதுவரையில் நடந்த 268 முகாம்களில் 12,29,639 பேர் கலந்துகொண்டுள்ளனர். அதில் தேர்ச்சி பெற்ற 2,24,721 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

270ஆவது முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

ஆவடி தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட பிபிஏ பட்டதாரியான அர்ஜுனா நம்மிடம் கூறுகையில், “நான் 15,000- 20,000 ரூபாய் ஊதியத்தை எதிர்பார்த்து இந்த நேர்காணலில் கலந்துகொண்டேன். ட்ரான்ஸ் இந்தியா நிறுவனத்தில் 18ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்திருக்கிறது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அரக்கோணத்தைச் சேர்ந்த பி.இ மெக்கானிக்கல் படித்துள்ள கவுதம் நம்மிடம் கூறுகையில், “நானும் சில நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன், ஆனால் கிடைக்கவில்லை. இந்த முகாமில் டிவிஎஸ் கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் எதிர்பார்த்து வந்தேன், 20 ஆயிரம் ரூபாயில் தான் கிடைத்திருக்கிறது. ஓகே தான்” என கூறினார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி கயல்விழி கூறுகையில், “மளிகை கடை, துணிக் கடைகளுக்கு போனால் குறைந்த சம்பளம் தான் கொடுப்பார்கள். இங்கு 12 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இந்த வருமானம் எங்களது குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

“எங்களைப் போல வேலை தேடுபவர்களுக்கு இந்த முகாம் பயனுள்ளதாக இருக்கிறது. எனினும் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கானோர் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். 5 ஆண்டுகளுக்கு 5 லட்சம் வேலைகள் என்பது குறைவுதான். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதேபோன்று அரசு துறைகளிலும் வேலை வாய்ப்பை அதிகரித்து இளைஞர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்த முகாமில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வணங்காமுடி

தனுஷுடன் நடித்த நடிகைகளும் நயன்தாராவிற்கு ஆதரவு!

ஐ.பி.எல் ஏலத்தில் 13 வயது வீரர்… யார் இந்த சூரியவன்ஷி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment