சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டி வேலைவாய்ப்பு மையத்தில் இன்று(ஜனவரி 20) நடக்கிறது.
2014ஜூன் 9அன்று இந்திய குடியரசுத் தலைவர் தமது நாடாளுமன்ற உரையில், “அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களை தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்து, நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பயனுள்ளமுறையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழியாக வழங்கும்” என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, 30.07.2019இல் வெளியிட்ட அரசாணையின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப்பட்டன.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் பணி காலியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருகின்றன.
தொழில் நெறி வழிகாட்டுதல், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றின் மூலம் வேலை நாடுபவர்களது வேலை பெறும் திறனை உயர்த்துவதே வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில், “சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் இன்று(ஜனவரி 20) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை இந்த முகாம் நடக்க உள்ளது.
முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எந்தவித கட்டணமும் செலுத்த தேவைஇல்லை.
முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்ய வேண்டும்” என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
-ராஜ்