ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு : உறுதி செய்த அம்பானி

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளதாக சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (ஜனவரி 7,8) நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை இன்று காலை தொடங்கிவைத்தார். அதன் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தொடர்ந்து இந்த மாநாட்டில் பல்வேறு தொழிலதிபர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானி நேரில் கலந்துகொள்ள முடியாத நிலையில், வீடியோ வாயிலாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார்.

அவர் பேசியதாவது, “வணக்கம்.சென்னையில் நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாடு அறிவுசார், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் மாநிலம். இந்தியாவில் தற்போது விவசாயம், தொழில்துறை என அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இதனால் விரைவில் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பல ஆண்டுகளாக ரிலையன்ஸ் பெருமையுடன் துணை நிற்கிறது. மாநிலம் முழுவதும் ஜியோவின் 1,300 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.  இதில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம்.

ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் 3.5 கோடி மக்களிடம் மின்னணு புரட்சியை கொண்டு சேர்த்துள்ளோம். அங்கு ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை கடந்த மாதமே முழுமையாக வழங்க தொடங்கிவிட்டது.

கனடாவின் புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் ரியாலிட்டியுடன் இணைந்து ஒரு அதிநவீன தரவு மையத்தை ரிலையன்ஸ் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் தொடங்க உள்ளது.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ரிலையன்ஸ் உறுதிபூண்டுள்ளது.

காலநிலை நெருக்கடியில் இருந்து தாய் பூமியை காப்பாற்ற, அதற்கு தேவையான நிலையான வளர்ச்சியை மேம்படுத்த மாநில அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்.

வரும் காலத்திலும் ரிலையன்ஸ் நிறுவன திட்டங்களை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்கும் என்றும் நம்புகிறோம்” என்று முகேஷ் அம்பானி பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

‘எல்.ஐ.சி’ படத்துக்கு சிக்கல்?

TNGIM2024: 1100 பேருக்கு வேலை தரும் அமெரிக்க நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share