ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை பல்வேறு தகவல்களை மறைத்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அவர் உயிரிழந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பல முக்கியத் தலைவர்கள் அவரை சந்திக்க வந்தனர். ஆனால் யாரையும் பார்க்க அனுமதி வழங்கவில்லை.
அதுவே ஆரம்பத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையம் தற்போது அப்பல்லோ நிர்வாகம் மீது பல புகார்களை தெரிவித்துள்ளது.
75 நாட்கள் ஜெயலலிதாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அப்பல்லோ நிர்வாகம், அதற்கான ஆவணங்களை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மோசமான நிலையில் ஜெயலலிதா அழைத்து வரப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறிய அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
எக்கோ சிகிச்சை நிபுணர் நளினி, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் பூங்குன்றன், அண்ணன் மகன் தீபக் ஆகியோரின் சாட்சிப்படி ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அப்பல்லோ நிர்வாகம், ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆம் தேதியே இதயம் செயலிழந்துவிட்டது என்று தெரிந்தும் சிபிஆர், ஸ்டெர்னோடமி சிகிச்சை, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை அழைத்து நேரத்தை வீணடித்திருக்கிறார்கள்.
சிபிஆர் செய்து 45 நிமிடங்களுக்குப் பிறகும் இதயம் செயல்படவில்லை என்றால் உயிரிழந்ததாக அறிவிப்பார்கள். ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அறிவிக்கவில்லை என்றும் ஆறுமுகசாமி ஆணையம் கூறியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தெரிந்த பிறகும் மூளைச்சாவு ஏற்படாததுபோல் மருத்துவக்குறிப்பில் அப்பல்லோ மருத்துவமனை பதிவு செய்துள்ளதாக ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது.
அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
கலை.ரா
சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்: ஆறுமுகசாமி ஆணையம் பகீர்!