சென்னை மாநகரில் பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்த கொள்ளையர்கள், துப்பாக்கியைக் காட்டி கடை உரிமையாளரை கை கால்களை கட்டிப்போட்டு 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது சென்னை மாநகர மக்களையும், காவல் துறையினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில்… ஆவடி மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட முத்தா புதுப்பேட்டையில் உள்ள கிருஷ்ணா ஜூவல்லரிக்குள் புகுந்து கடை உரிமையாளரின் கை கால்களை கட்டிப்போட்டுவிட்டு 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு பதட்டம் இல்லாமல் தப்பித்துள்ளனர்.
என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
இன்று ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கிருஷ்ணா ஜுவல்லரி கடை வாசலுக்கு சற்று தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து நான்கு பேர் இறங்கினார்கள்.
அவர்களில் ஒருவர் மட்டும் ஜூவல்லரிக்குள் நகை வாங்க செல்வது போல நுழைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து உள்ளே செல்கிறார்கள்.
வெயில் நேரத்தில் கடைக்குள் பெரிய கூட்டம் இல்லை. வழக்கமாகவே இதுபோன்ற நேரங்களில்தான் வியாபாரம் தொடங்கும். கூட்டம் இல்லாத நிலையில் திடீரென அந்த நால்வரில் ஒருவர் கடையின் ஷட்டரை இழுத்து மூடினார்.
சத்தம் கேட்டு கடை ஊழியர்களும், முதலாளியும் திரும்பிப் பார்த்தனர். சில ஊழியர்கள் ஷட்டர் இழுத்தவரை நோக்கி ஓடிவந்தனர். அப்போது கடை முதலாளி பிரகாஷின் கை கால்களை கயிறு மூலம் கட்டிப் போட்டனர்.
அப்போது பணியாளர்கள் ஓடிவந்து கேள்வி கேட்க, அந்த நால்வரில் 3 பேர் கையில் பிஸ்டலை எடுத்துக் காட்ட, பணியாளர்கள் பயந்துவிட்டனர்.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஷோகேஷ்களை திறக்க சொல்லி 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு காரில் தப்பித்துள்ளனர். பத்தே நிமிடத்தில் இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன.
அவர்கள் தப்பித்துச் சென்ற பிறகே போலீஸுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் மற்றும் டிசி, ஏசி, இன்ஸ்பெக்டர்கள் குவிந்தனர். அந்தப் பகுதியில் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் இப்போது வந்தவர்கள் நன்றாக தமிழ் பேசியிருக்கின்றனர் என கடை ஊழியர்கள் போலீஸாரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
தேர்தல் நேரமாக இருப்பதால் எதிர்க்கட்சியினரின் சட்டம் ஒழுங்கு பற்றிய விமர்சனங்கள் இந்த சம்பவத்தை வைத்து அதிகமாகும். அரசியல் அறிக்கைகள் ஒருபக்கம் இருக்க, துப்பாக்கி முனையில் பட்டப் பகலில் கொள்ளை அடிப்பது பொது மக்கள் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிற நிலையில்… இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதையடுத்து, துப்பாக்கி கொள்ளையர்களை இரவுக்குள் பிடிக்க டிஜிபி அழுத்தம் கொடுத்து வருவதால்… சென்னை, ஆவடி, தாம்பரம் என மூன்று மாநகர போலீசாரும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வணங்காமுடி
மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?
பாஜக நம்மை சீண்டி வருகிறது… தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்!