தமிழக மாணவர்கள் பதற்றப்படாமல் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
என்ஐடி, ஐஐடி, உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கு ஜேஇஇ என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
ஜனவரி 24ம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தத் தேர்வில் பங்கேற்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2020-21 கல்வியாண்டில், கொரோனா பெருந்தொற்றின் விளைவாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
தமிழ்நாட்டிலும் அவ்வாறான சூழலே நிலவியது. ஆகவே பத்தாம் வகுப்பு படித்த அனைவரும் தேர்வானதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அப்போது அறிவித்தது.
அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போது, குறிப்பிட்ட அந்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை 2023ல் எழுதவுள்ளனர்.
ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு மதிப்பெண் அல்லது தரநிலை கேட்கப்படுகிறது. ஆனால் நம் மாணவர்கள் அதை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளனர்.
ஆகவே பெருந்தொற்றுக் கால அவசரநிலையை மனதிற்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்கும் வசதி வேண்டும் என தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய தேர்வு முகமையும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருக்கிறது. எனவே ஜேஇஇ தேர்வுக்கு மாணவர்கள் பதற்றமடையாமல் தங்களை தயார் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கலை.ரா
நிலத்துக்கு உரிய இழப்பீடு: ஆட்சியர் அலுவலகங்களில் தொடரும் ஜப்தி நடவடிக்கை!