திமுக ஆட்சியில் மீனவர்கள் துயரம்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

தமிழகம்

சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருஉருவப் படத்துக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 18) மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,

“சிந்தனை சிற்பியின் புகழை போற்றும் வகையில் அதிமுக ஆட்சியில் மணிமண்டபமும், சிங்காரவேலர் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் பரிசு தொகையும், எட்டு கிராம் தங்கமும் கொண்ட விருது வழங்கவும் ஆவண செய்யப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து மீனவ மாவட்டங்கள் தொடர்ந்து துயரத்துக்கு ஆளாகி வருகிறது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 மீனவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தப்பட்டதோடு, 23 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

20 மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மீனவர்களை விடுவிக்க மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவற்றை கண்டு கொள்ளாமல் திமுக அரசு செயல்படுகிறது.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

போதை கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்காமல் கரும்புக்கரம் காட்டுவதால் தமிழகத்தில் போதை, கஞ்சா கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கஞ்சா, போதை வஸ்துகளை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்காததால் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியும்.

பாஜக உடன் கூட்டணி இல்லை. இதை பலமுறை சொல்லிவிட்டோம். பாஜக கூட்டணிக்கான அதிமுக கதவு எப்பொழுதோ அடைக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் நட்பு ரீதியான அடிப்படையில் மட்டுமே  பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினர்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் கட்சியில் இரண்டு பிரிவுகள்: பிரதமர் மோடி தாக்கு!

“அடுத்த 100 நாட்கள்”: பாஜகவினருக்கு மோடி சொன்ன அட்வைஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *