மதுரையில் உள்ள பூக்கடைகளில் மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாகக் கடந்த சில தினங்களாகப் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.
மழையின் காரணமாக மலர் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் மதுரை மாட்டுத்தாவணி பூக்கடைகளுக்குப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
ஆகையால், வழக்கமாக ரூ. 800-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை உயர்ந்து ரூ. 2000 வரை விற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை முதல் முகூர்த்த நாள் என்பதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
மல்லிகை பூ கிலோ ரூ.3,000க்கும், ரூ.50க்கு விற்ற சம்பங்கி ரூ.250க்கும், ரூ.300க்கு விற்ற பிச்சிப்பூ, முல்லைப் பூக்கள் ரூ.1,000க்கும் விற்பனை ஆகின்றன.
இதேபோன்று ரூ.50க்கு விற்கப்பட்ட பட்டன் ரோஸ் ரூ.250க்கும், ரூ.30 ஆக இருந்த அரளி பூ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது. மேலும், மல்லிகையின் விலை இனி வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, பூக்களின் விலை உயர்வால் தேவை அதிகமிருந்தும் மக்கள் பூக்களை வாங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மோனிஷா
மதுரை மல்லிகை விலை கடும் உயர்வு !