“ஜல்லிக்கட்டு பாக்க வாங்க” : நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!

தமிழகம்


ஜல்லிக்கட்டு வழக்கில் டிசம்பர் 6ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 1) உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். 2023 பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வாடிவாசலைக் களம் காணக் காளைகளும் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரோஸ்தகி, அணிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. காளைகள் எப்படி 15 மீ தூரம் மட்டும் ஓட முடியும்? வீரர்கள் அனைவரும் காளையைத் தொட அனுமதி உள்ளதா?

வாடிவாசலிலிருந்து காளைகள் வெளியே வரும் போது, 15 மீட்டர் வரை அல்லது 30 நொடிகள் வரை, எத்தனை பேர் காளையின் திமிலை பிடிக்க முயல்வார்கள்?

காளைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் மற்றும் சென்று சேரும் இடங்களைத் தவிர ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா?” என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

அவர், “ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையைத் தொட முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும், “ஜல்லிக்கட்டு போட்டியில் சில மரணங்கள் நடந்திருப்பது உண்மைதான். இதைத் தடுக்க ஜல்லிக்கட்டு சட்டத்தில் விதிகள் உள்ளன. இந்த விதிகள் காரணமாக மரணங்கள் தடுக்கப்படுகின்றன.

அதுபோன்று ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை விளையாட்டு கிடையாது. ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டுக் காளை மாடுகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதன் மதிப்பு அதிகரித்து சந்தைகளில் விலையும் அதிகரிக்கும். குறிப்பாக நாட்டு மாடுகளைக் காக்க உதவும்” என்று தெரிவித்தார்.

jallikattu case kabil sibal argument

அப்போது குறுக்கிட்ட நீத்பதி கே.எம்.ஜோசப், “காளைகளுக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பயத்தைக் கொடுக்கக் கூடாது. காளையை பொம்மையைப் போல் பயன்படுத்தக் கூடாதே? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த கபில் சிபில், “காளைகளுக்கு வலி, வேதனை ஏற்படாது. அப்படி ஏற்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். காளைகள் மட்டும் தான் விளையாட்டுக்குப் பயன்படுத்துகின்றனவா? மற்ற விலங்குகளை வைத்து விளையாட்டுகள் நடத்தப்படுவதில்லையா? பல விலங்குகளை வைத்து வேலை வாங்குகிறார்களே?” என கேள்வி எழுப்பி வாதிட்டார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு காரணமாகவே நாட்டுக் காளைகள் பாதுகாக்கப்படுகிறது. இந்த போட்டி இல்லை என்றால் நாட்டு காளை மாடுகள் அழிந்துவிடும். காளையின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவப்படுவதாகவும், அவற்றுக்குச் சாராயம் ஊற்றப்படுவதாகவும் சொல்கிறார்கள். காளையைப் பெற்ற பிள்ளை போல் வளர்த்து வருகிறவர்கள் இதுபோன்று செய்வார்களா?

ஜல்லிக்கட்டு தொடர்பாகத் தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை. இந்த விளையாட்டு எப்படி இருக்கிறது என்பதை நீதிபதிகள் பார்க்க வேண்டும். எங்களிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. அதைக் காட்டுகிறோம்” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தீர்ப்பு வழங்கிய பின்னர், ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பார்க்க அனைவரும் சென்னை செல்ல வேண்டும் என நகைச்சுவையாகத் தெரிவித்தனர்.

தென் தமிழகத்தில் தான் போட்டிகள் நடைபெறும் சென்னையில் அல்ல. கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் போது உங்களை அழைப்போம் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு, மாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல மனிதர்கள் காயப்படுகிறார்கள் அதுவும் விசாரிக்கப்பட வேண்டியது என விலங்குகள் அமைப்புகள் கூறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதற்குக் கால்பந்து, குத்துச்சண்டை எனப் பல விளையாட்டுகளில் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். அதற்கு என்ன சொல்ல முடியும் என்று தமிழக அரசு தரப்பில் கேள்வி முன்வைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பயன்படும் ஒலிபெருக்கிகள் காளைகளுக்குத் தொல்லையாக இருக்கிறது என விலங்குகள் அமைப்புகள் சொல்கிறதே என நீதிபதிகள் கேள்வி எழுப்ப,
“திருமணங்களிலும் திருவிழாக்களிலும் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அங்குள்ள குதிரைகளும் யானைகளும் மகிழ்ச்சியாய் இருக்கிறதா?” என அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் சட்டம் தெளிவாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடம், காளைகள் அடக்கப்படும் முறை உட்பட முழு விவரங்களை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க அடிப்படையாக இருந்தது என்ன என்று மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

பிரியா

”காமெடியன்ஸ்லாம் தூரமா போங்க”: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லர்!

5ஜி டவர் : தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *