Jail prisoner under torture... 3 people including DIG Rajalakshmi suspended!

சிறை கைதி சித்ரவதை… டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமார் என்பவர் சிறைச்சாலை விதிகளை மீறி வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த சில மாதங்களாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்.

இதற்கிடையே டிஐஜி வீட்டில் இருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.4.25 லட்சம் பணத்தை திருடியதாக கூறி, அவரை தனிச்சிறையில் அடைத்து போலீசார் சித்ரவதை செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவக்குமாரின் தாயார் கலாவதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, புகார் தொடர்பாக வேலூர் தலைமை குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதன்படி, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார் நீதிபதி ராதாகிருஷ்ணன். அவரது பரிந்துரையின் அடிப்படையில், வேலூர் சிறையில் இருந்து தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் தனிச்சிறையில்  81 நாட்களும், மூடிய தனிச்சிறையில் 14 நாட்களும் அடைக்கப்பட்டு கைதி சிவக்குமாரை  சித்ரவதை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி-யான ராஜலட்சுமி, மத்திய சிறை (பொறுப்பு) கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜி-யின் மெய்க்காவலர் ராஜூ, சிறப்புப் படை காவலர்கள் ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, வார்டர்கள் சுரேஷ், சேது ஆகிய 14 பேர் மீது வேலூர் சிபிசிஐடி போலீஸார் பி.என்.எஸ் 115(2), 118(2), 146, 49, 127(8) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பின்னர் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். அவர் சேலம் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாரிடமும்,  வேலூர் மத்திய சிறையில் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதனடிப்படையில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி கடந்த மாதம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் மூவரும் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை ஏடிஜிபி பிறப்பித்திருக்கிறார்.

மேலும் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரை செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

பிக் பாஸ் சீசன் 8 : அநியாயம் செய்த ஆண்கள் அணி !

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts