பாரம்பரிய மிக்க மைசூர்பாகு தற்போது பல வடிவங்களை எடுத்துவிட்டது. அதில் ஒருவகைதான் இந்த வெல்ல மைசூர்பாகு. ‘தீபாவளிக்கு நிறைய ஸ்வீட்ஸ் வந்தது… நான் ஒண்ணுக்கூட சாப்பிடலை’ என்று தீபாவளிக்கு மறுநாள் புலம்புகிறவர்களுக்கு இந்த சுவையான வெல்ல மைசூர்பாகு செய்து கொடுத்து அசத்தலாம்.
என்ன தேவை?
கடலை மாவு – ஒரு கப்
வெல்லத்தூள் – 2 கப்
நெய், எண்ணெய் கலவை – ஒன்றரை கப்
எப்படிச் செய்வது?
வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டுச் சூடாக்கி, வடிகட்டி வைக்கவும். அடிகனமான வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றி ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு வைக்கவும். பிறகு மாவைச் சிறிது சிறிதாகத் தூவிக்கொண்டே கைவிடாமல் கிளறவும்.
இன்னொரு அடுப்பில் நெய் – எண்ணெய்க் கலவையைச் சூடாக்கி, மைசூர்பாகு கிளறக் கிளற இதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து இடைவிடாமல் கிளறவும். ஊற்றிய எண்ணெய் – நெய் மாவுக் கலவையில் இருந்து பிரிந்து வரும் பக்குவத்தில் அடுப்பில் இருந்து இறக்கவும்.
நெய் தடவிய ட்ரேயில் ஊற்றிச் சமப்படுத்தவும். 5 நிமிடங்கள் கழித்து வில்லைகளாக்க கோடு மட்டும் போட்டு வைக்கவும். 20 நிமிடங்கள் ஆறிய பின் வில்லைகளை அழுந்தக் கீறிப் பிரித்துத் துண்டுகளாக எடுக்கவும்.