அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளிலுள்ள 30 சதவீத காலிப் பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
வரும் பிப்ரவரி15-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 13) சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைதொடர்ந்து, “நாளைக்குள் முதல்வரிடம் இருந்து எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று நம்புவதாகவும், முதல்வர் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறோம், இல்லை என்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி போராட்டம் தொடரும்’ என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினர்.
இந்தசூழலில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று (பிப்ரவரி 13) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசு ஊழியர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன,
குறிப்பாக;
1. 01.07.2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தும் நாளிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
2. அரசுப் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
3. கடந்த ஆட்சியில் 2016, 2017 மற்றும் 2019ல் அரசு ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தக் காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலங்கள் பணிக்காலமாக வரன்முறை செய்து ஆணையிடப்பட்டது.
4. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
5. அரசுப் பணியாளரின் பணிவரன்முறை செய்யப்படுவதைக் கருத்தில் கொள்ளாமல் பவானி சாகர் அடிப்படை பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
6. சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு (பார்வைத் திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, லோக்கோமோட்டர் குறைபாடு) போக்குவரத்துப்படி ரூ.2,500/- ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்திற்கு சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இதுவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 65,075 ஓய்வூதியர்களின் குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கிடவேண்டும் என்ற நோக்கத்துடனும், அரசு ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும் பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 27,858 பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 60,567 பேர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மேலும் 10,000 பேர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் குறைந்த பட்சம் 50,000 பேர் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு அரசுப் பணி நியமனம் பெறுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில் எவ்விதமான தடங்கலும் இல்லை என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான் இந்த விவரத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மேலும், பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 243 யினை நடைமுறை படுத்துவது குறித்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அதில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அவர்களுடைய வேறு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடர்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்தப் பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான எதிர்பாராத பெரும் செலவினங்கள், மேலும் இவற்றிற்கு ஒன்றிய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில்,
அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்கான மாநில அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு ரூபாய் 20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது.
எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம்.
விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும் இந்த அரசு உணர்ந்தே இருக்கின்றது.
எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா