சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துகள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம்.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உள்ள மரபணு கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
முற்றிய பலாக்கொட்டை (ஃப்ரெஷ்) – 25
தேங்காய்ப் பல் – கால் கப்
மிளகாய்த்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
உடைத்த முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – அரை டீஸ்பூன்
வறுத்த கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பலாக்கொட்டைகளை முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் தோலை உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி லேசாகத் தட்டவும்.
இதனுடன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, முந்திரி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்), தேங்காய்ப் பல், உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் வைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஊறவைத்த கலவையைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இதனுடன் வறுத்த கடலை மாவைத் தூவிக் கருகாமல் கிளறி இறக்கவும்.