கோடைக்காலம்தான் பலாப்பழத்துக்கு சீசன் என்றாலும், அது உடல் சூட்டை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஆழமாக நம்மிடம் இருக்கிறது. இதனாலேயே பலரும் அதைச் சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதும் உண்டு.
ஆனால், கோடையில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டையும், அதனால் ஏற்படும் நோய்களையும் போக்கும் அருமருந்து பலாப்பழம். இதைச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்பது தவறான நம்பிக்கை. இது உடலுக்குக் குளர்ச்சி தரக்கூடிய பழம். அப்படிப்பட்ட பலாப்பழத்தில் இந்த பலாப்பழ பருப்பு பாயசம் செய்தும் சுவைக்கலாம்.
என்ன தேவை?
பலாச்சுளைகள் – ஒரு கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)
பாசிப்பருப்பு – அரை கப்
வெல்லத்தூள் – அரை கப்
பால் – 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)
உடைத்த முந்திரி, உலர்திராட்சை – தலா 10
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கெட்டித் தேங்காய்ப்பால் – ஒரு கப்
தேங்காய்ப் பல் – அரை கப் (வறுக்கவும்)
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து, வேகவைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பலாச்சுளைகளைச் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இதனுடன் பலாச்சுளைகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி, தேங்காய்ப்பால் சேர்க்கவும். மேலே முந்திரி, திராட்சை, தேங்காய்ப் பல் சேர்த்துப் பரிமாறவும்.