கிச்சன் கீர்த்தனா: கேரள பலாப்பழ அல்வா
பலா சீசன் தொடங்கிவிட்டது. சாலையோரம் தள்ளுவண்டியில் பலாப்பழத்தை இரண்டாகப் பிளந்துவைத்து விற்க தொடங்கிவிட்டார்கள். பலாப்பழத்தின் சுண்டியிழுக்கும் சுவையை நினைத்தாலே சாப்பிடத் தோன்றும். அதற்காகப் பலாச்சுளைகளில் ஒன்றையோ, இரண்டையோ மட்டும் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு நழுவிவிட முடியாது. அதற்காக சிலர் முழு பழத்தையும் வாங்கி விடுவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் ஒருகட்டத்துக்கு மேல் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். அவர்கள் இந்த கேரள ஸ்டைல் பலாப்பழ அல்வா செய்யலாம். இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
என்ன தேவை?
பலாச்சுளை – ஒரு கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது)
வெல்லத்தூள் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
உடைத்த முந்திரி – அரை கப்
நெய் – 10 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு நெய்விட்டு, உடைத்த முந்திரி சேர்த்து வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பலாச்சுளைகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் விழுதாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூள் சேர்த்து அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். பிறகு, மீண்டும் வெல்லக்கரைசலை அடுப்பிலேற்றி ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும்.
இதனுடன் அரைத்த பலாச்சுளை விழுது, மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். மேலே வறுத்த முந்திரியால் அலங்கரித்துப் பரிமாறவும்.
தோசைக்குத் தனியாக மாவு அரைக்க வேண்டுமா?