மதுரை மற்றும் திண்டுக்கல்லில் ஜெயபாரத் சிட்டி, கிரின்சிட்டி, அன்னை பாரத் மற்றும் கிளாட்வே ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
மதுரையில் உள்ள அன்னை பாரத்சிட்டி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் கட்டுமான நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் மற்றும் இதன் கிளை நிறுவனமான கிளாட்வே, கிளாட்வே கிரின் சிட்டி நிறுவனம் ஆகியவற்றில் இன்று காலை ( ஜூலை 20 ) 7 மணி முதல் வருமான வரித் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. காலை முதல் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனங்கள் முழுவதுமாக வருமான வரித் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஆவணங்கள் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அழகர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்கள், அரசு ஒப்பந்ததார்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக, மதுரையில் அவனியாபுரம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுக்குறிச்சியில் தனியார் நிறுவனங்களின் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. மதுரை அவனியாபுரத்தில் சோதனையின் போது பணம் எண்ணும் இயந்திரத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கோசுக்குறிச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நத்தம் – துவரங்குறிச்சி நெடுஞ்சாலை பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானர்களின் இடங்களிலும், அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரை தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா