தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2வதுநாளாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் (மே 27) சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ( மே 26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்ய முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதம், கார் கண்ணாடி உடைப்பு என களேபரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல பகுதிகளில் நள்ளிரவிலும் நீடித்த சோதனை, மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் தற்போது 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் நேற்று சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, நள்ளிரவில் மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர்.
ஆனால், வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.
துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு அவர் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளின் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து 2வதுநாளாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் ஆகிய 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
‘எனது வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெறவில்லை’: செந்தில் பாலாஜி விளக்கம்!
கிச்சன் கீர்த்தனா: தக்காளி – மணத்தக்காளி ரசம்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!