கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தீர்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம், கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அதிமுக தரப்பில் இன்பதுரை, பாமக தரப்பில் கே.வேலு, தேமுதிக தரப்பில் பி.பார்த்தசாரதி, பாஜக தரப்பில் மோகன் தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது கடந்த சில வாரங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் என்.எல்.ராஜா, யானை ஜி.ராஜேந்திரன், வி.ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பிபி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி பாலாஜி தனது தீர்ப்பில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் என்பது மதுவின் தீமைகளை சமூகம் உணர ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணி என்றார். இதுபோன்ற கள்ள மதுபான விற்பனை மாநில காவல்துறையின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி என்பதைக் கண்டு நீதிமன்றம் திகைப்பில் உள்ளது.
உள்ளூர் காவல்துறையினருக்கு தெரியாமல் தான் விற்பனை நடந்ததாகத் தோன்றினாலும், உண்மையில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டனர் என்பதே உண்மை எனவே, இந்த துயர சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்றார்.
தொடர்ந்து வாசிக்கப்பட்ட தீர்ப்பில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக போலீசார் கூறினாலும், 2023ல் நடந்த செங்கல்பட்டு, விழுப்புரம் சம்பவங்களிலும், 2024ல் நடந்த கள்ளக்குறிச்சி சம்பவத்திலும் நிலவி வரும் உண்மை நிலை வேறுவிதமாக உள்ளது என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
ஏற்கனவே, 13.12.2023 தேதியிலான காவல்துறை தலைமை இயக்குநரின் கடிதத்திற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 67 அப்பாவிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி தொடர்ந்து தங்கு தடை இன்றி கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததிலிருந்து அவருக்கும், காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நம்ப வேண்டியுள்ளது.
காவல்துறையினர் கள்ளச்சாராய விற்பனையை முளையிலேயே கிள்ளி இருந்தால், 67 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். யார் இதற்கு பொறுப்பு ஏற்கப்போகிறார்கள்?
மேலும், கட்சிகளின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இடைக்கால குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்கூறிய அனைத்து காரணங்களுக்காகவும், விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கூடாது என்ற அட்வகேட் ஜெனரலின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
60க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளதால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐக்கு மாற்றுவது பொருத்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘3 விநாடி வீடியோ நீக்கியே ஆக வேண்டும் ‘- நயனை விரட்டும் தனுஷ்