பிறந்தநாளன்று கொல்லப்பட்ட ஐடி இன்ஜினியர்… கைதான திருநம்பி: அதிரவைக்கும் க்ரைம்!

Published On:

| By Monisha

IT employee burned death

சென்னை கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் நேற்று (டிசம்பர் 23) பெண் ஒருவர் சுமார் 7.30 மணியளவில் ‘என்னை காப்பாற்றுங்கள்…’ என்று கத்தியுள்ளார். இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உள்ளே சென்று பார்த்த போது கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் கட்டுமான பணிக்காக வைத்திருந்த மணல், தண்ணீர் ஆகியவற்றை கொண்டு வந்து தீயை அணைத்தனர். ஆனால் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் உடனே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை. இது குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழம்பூர் காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பெண் ‘வெற்றி… வெற்றி’ என்று கூறியதோடு ஒரு செல்போன் எண்ணையும் கூறியுள்ளார். இதனை போலீசார் குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டனர்.

பின்னர் சற்று நேரத்திலேயே அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். குரோம்பேட்டை மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொலீசார் அந்த பெண் கூறிய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியதில் தன்னுடைய பெயர் வெற்றிமாறன் என்றும் பெருங்குடியில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். தீயில் உடல் கருகி இறந்த பெண் குறித்து விசாரித்த போது யார் என்று தெரியவில்லை என்றும் தான் நேரில் வருவதாகவும் கூறியுள்ளார் வெற்றிமாறன்

சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த வெற்றிமாறன் இறந்த பெண்ணின் உடலை பார்த்து ‘இவர் எனது தோழி நந்தினி என்றும் என்ன ஆனது என்றும் அழுதுள்ளார். ஆனால் வெற்றிமாறனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பவம் நடத்த இடத்தில் கிடைத்த நந்தினியின் செல்போனை போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிவந்துள்ளன.

அப்போது நந்தினி எரித்து கொலை செய்யப்பட்ட கட்டிடத்தில் வெற்றிமாறன் இருந்ததற்கான செல்போன் சிக்னலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் வெற்றிமாறனை விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர்.

முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பிய வெற்றிமாறன் போலீசார் செல்போன் சிக்னல் ஆதாரங்களைக் கூறி விசாரித்ததால் உண்மையைக் கூறியுள்ளார். நந்தினி தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் தான் அவரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். மதுரையை சேர்ந்த வெற்றிமாறன் ஒரு திருநம்பி என்பதும் பாண்டி முருகேஸ்வரி என்ற தனது பெயரை பின்னர் வெற்றிமாறன் என்று மாற்றிக் கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வெற்றிமாறன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

நடந்தது என்ன?

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் – ஜெயலட்சுமி. இவர்களுக்கு அமுதா, நந்தினி (25) என்று இரு மகள்கள். மூத்த மகள் அமுதா பெற்றோருடன் இருக்கும் நிலையில் இளைய மகள் நந்தினி சென்னை பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

வெற்றிமாறனும் நந்தினியும் பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது பாண்டி முருகேஸ்வரியாக இருந்த வெற்றிமாறன் நந்தினியிடம் தனது உடல் மாற்றங்கள் குறித்து கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு பாண்டி முருகேஸ்வரி என்ற தனது பெயரை வெற்றிமாறன் என்றும் மாற்றியுள்ளார். மேலும் வெற்றிமாறன் தனக்கு தெரிந்த திருநம்பிகள் மூலம் மும்பைக்கு சென்று ஆணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் இருந்தார்.

ஆனால் இது குறித்து அறிந்து கொண்ட நந்தினி வெற்றிமாறனை தடுத்துள்ளார். மேலும் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்றும் வெற்றிமாறனிடம் உறுதி அளித்துள்ளார். சென்னைக்கு பணிக்கு வர இருவரும் ஒன்றாக நேர்காணலில் கலந்து கொண்ட நிலையில் வெற்றிமாறனின் பள்ளி சான்றிதழ்களில் பாண்டி முருகேஸ்வரி என்று பெயர் இருந்ததால் அவர் தேர்வாகவில்லை.

இந்நிலையில் நந்தினி அலுவலகத்தில் வெற்றிமாறன் குறித்து கூறி அவரை பணியில் சேர்த்துள்ளார். ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்த இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக சென்னையை சுற்றி பார்த்து வந்துள்ளனர். அப்போது வெற்றிமாறன் தான் திருநம்பி என்பதால் தனக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நந்தினியிடம் கூறியுள்ளார். அதற்கு நந்தினியும் தான் எப்போது உடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் நந்தினிக்கும் பள்ளிக்கரணையை சேர்ந்த ராகுல் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாற நந்தினி வார இறுதி நாட்களில் வெற்றிமாறனுடன் வெளியில் செல்லாமல் ராகுலுடன் செல்ல ஆரம்பித்துள்ளார்.

இது வெற்றிமாறனுக்கு பிடிக்காததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நந்தினியை எச்சரித்துள்ளார். ஆனால் நந்தினி வெற்றிமாறனிடம் நீ எனக்கு தோழி என்றும் ராகுல் தனது காதலன் என்றும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் நந்தினி கூறியதை வெற்றிமாறனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் இருவரும் பேசி கொள்ளாமல் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நந்தினியின் 26வது பிறந்தநாள். இதனால் நேற்று முன் தினம் நந்தினிக்கு போன் செய்த வெற்றிமாறன், ‘ஒரு நாள் முழுவதும் தன்னுடன் நேரம் செலவிட வேண்டும். அதன்பிற்கு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த நந்தினி வெற்றிமாறனுடன் நேற்றைய தினம் கடற்கரை, கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் கேளம்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் பொன்மார் வழியாக சென்று கொண்டிருந்த போது நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் சர்ப்ரைஸ் பரிசு ஒன்று வைத்திருப்பதாக கூறி கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு கட்டிடத்திற்குள் அழைத்து சென்றுள்ளார் வெற்றிமாறன்.

உள்ளே சென்றதும் நந்தினியை கட்டையால் தாக்கிய வெற்றிமாறன் பின்னர் அவரது கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டியுள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தினியிடம் கேட்டுள்ளார் வெற்றிமாறன். ஆனால் நீ எனக்கு தோழி என்றும் தான் ராகுலை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சொல்லியுள்ளார் நந்தினி. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன் நந்தினியின் கை, கால்களில் உள்ள நரம்பை அறுத்துள்ளார். வலியால் துடித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா முடியாதா என்று மீண்டும் கேட்டுள்ளார் வெற்றி மாறன்.

அதற்கு நந்தினி முடியாது என்று ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன் நந்தினியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

சென்னை அணியோட நெக்ஸ்ட் கேப்டன் யாரு?… சி.ஈ.ஓ காசி விஸ்வநாதன் ஓபன் டாக்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share