இஸ்ரோவின் சந்திரயான்-3 வரை பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கு வர்ணனை செய்து வந்த ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வளர்மதி இன்று (செப்டம்பர் 4) காலமானார்.
இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதல் நிகழ்வுகளை 10, 9 என்ற கவுன்ட் டவுன் தொடங்கி விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்படுவது வரை ஸ்ரீஹரிகோட்டாவின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து வர்ணனை செய்பவர் தான் ‘மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்’.
இந்த பணியை பல ஆண்டுகாலமாக செய்து வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி வளர்மதி.
அரியலூரில் பிறந்து தமிழ்வழியில் பள்ளிப் படிப்பைப் பயின்ற வளர்மதி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்து, 1984ஆம் ஆண்டு இஸ்ரோ பணியில் சேர்ந்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டில் ‘ரிசாட்-1’ பணியின் திட்ட இயக்குநர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2015ஆம் ஆண்டு அப்துல் கலாம் நினைவாகத் தமிழக அரசால் வழங்கப்பட்ட விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றார்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய மிக முக்கிய ராக்கெட்டுகளுக்கு வளர்மதி மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக (வர்ணனையாளராக) பணியாற்றி உள்ளார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பு தான் அறிவிக்கும் கவுண்டவுன் மூலம் விஞ்ஞானிகளை மட்டுமல்ல சாதாரண மக்களையும் பரபரப்பின் உச்சிக்கு அழைத்து சென்றுள்ளது வளர்மதியின் குரல்.
கடைசியாக கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்திற்கு கவுன்ட் டவுன் தொடங்கி அதன் வெற்றிவரை இவர் தான் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக செயல்பட்டார்.
(கீழே பதிவிட்டுள்ள வீடியோவில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவும் போது மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக செயல்பட்ட விஞ்ஞானி வளர்மதியின் கணீர் குரலை சரியாக 34.13 நிமிடத்திலிருந்து தெளிவாக கேட்க முடியும்)
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விஞ்ஞானிகள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சற்றும் எதிர்பாராதது!
இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் பிவி வேங்கிடகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “வளர்மதி அவர்களின் குரல் இனி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயல்படும் அடுத்தடுத்த இஸ்ரோ மிஷன்களில் ஒலிக்காது. சந்திராயன்-3 தான் அவரது கடைசி கவுன்ட்டவுன். அவருடைய மறைவு சற்றும் எதிர்பாராதது. அவருக்காக வருந்துகிறேன். வணக்கங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
எனது ஆழ்ந்த இரங்கல்!
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இஸ்ரோவின் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர்,சந்திரயான் 3-இன் கவுண்டவுன் குரலுக்கு சொந்தக்காரர் ‘வர்ணனையாளர்’ தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று பல்வேறு தரப்பினரும் விஞ்ஞானி வளர்மதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
’பிரதமரும் கொலை செய்ய அழைக்கிறாரா?’: சனாதன சர்ச்சைக்கு உதயநிதி பதிலடி!
உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம்!
மத உணர்வுகளைத் தூண்டி குளிர் காய்கிறார்கள்: பாஜகவை சாடிய ஸ்டாலின்