உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அவரது இல்லத்தில் நேரில் சென்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று(அக்டோபர் 16) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அவர் இன்று காலையில் சென்னை பாடியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு நேரில் சென்றார்.
அங்கு உலகக்கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்த சோம்நாத், சந்திரயான் மாதிரி மினியேச்சரை பரிசாக வழங்கினார்.
அப்போது, ”இந்தியர்கள் எல்லோரையும் போன்று இஸ்ரோவும் பிரக்ஞானந்தாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறது. அவர் இப்போது உலகின் நம்பர் 15 ஆக இருக்கிறார். விரைவில் அவர் உலகின் நம்பர் 1 ஆக வருவார்.
செஸ் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு பழைமையான விளையாட்டு. நாம்தான் அதன் பிறப்பிடம். செஸ் புத்திசாலித்தனம், திட்டமிடல் மற்றும் துல்லிய வியூகத்தின் அடிப்படையில் விளையாடக்கூடியது.
நிலவில் பிரக்யான், தரையில் பிரக்யானந்தா… நிலவில் இந்தியாவுக்காக இஸ்ரோ செய்ததை, நிலத்தில் பிரக்ஞானந்தா சாதித்து விட்டார்..
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்ற இளைஞர்களை ஊக்குவிப்பதில் பிரக்ஞானந்தா இஸ்ரோவுடன் இணைந்து செயல்படப் போகிறார்” என்று சோம்நாத் பாராட்டு தெரிவித்தார்.
#WATCH | Chennai, Tamil Nadu: ISRO Chairman S Somanath meets Indian Chess Grandmaster Rameshbabu Praggnanandhaa at his residence in Chennai pic.twitter.com/iDx27xqBIs
— ANI (@ANI) October 16, 2023
தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் காலை உணவு உட்கொண்ட சோம்நாத், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார்.
அதன்பின்னர் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்ச்சியிலும், அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்விலும் சோம்நாத் கலந்துகொள்கிறார்.
அதனையடுத்து இன்று மாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு திரும்ப உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா