“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவுக்கு அதிகரித்து இருக்காது” என 3,000 விவசாயிகள் பங்கேற்ற காவேரி கூக்குரல் கருத்தரங்கில் தமிழக விவசாய சங்க தலைவர் கு.செல்லமுத்து கூறினார்.
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம் – சாமானியர்களுக்கும் சாத்தியம்’ என்ற மர விவசாய கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது.
முன்னோடி விவசாயி துரைசாமியின் 50 ஏக்கர் சந்தன பண்ணையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3,000 விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
தொடக்க விழா நிகழ்வில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில்,
“விவசாயிகளின் மனதில் மரம் நடும் எண்ணத்தை ஈஷா விதைத்து இருக்கிறது. ஈஷா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவுக்கு அதிகரித்து இருக்காது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் விவசாய நிலங்களில் மரம் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் தோட்டத்தின் உரிமையாளர் துரைசாமி சந்தன மரங்களை நட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அவர் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இப்போது நடைபெறும் இக்கருத்தரங்கும் விழிப்புணர்வும் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் தமிழக விவசாயிகள் கடனாளியாக இருக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. எனவே, வரும் தலைமுறை விவசாயிகள் எதிர்காலத்தில் கடன் இன்றி, மானம் மரியாதையுடன் கெளரவமாக, பணக்காரர்களாக வாழ வேண்டும் என்றால் காவேரி கூக்குரல் சொல்லும் மரம் நடும் வழிமுறைகளை முழு மனதாக ஏற்று செயலாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: மக்ரோனி சூப்
டிஜிட்டல் திண்ணை: முழுநாள் முயற்சி… 3 நிமிட சந்திப்பு! சோனியா ட்ரீட்மென்ட்…. அதிர்ச்சியில் அழகிரி