கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இன்று (அக்டோபர் 23) அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்து சிதறியதில் காரில் பயணித்த ஒருவர் உடல் கருகி பலியானார்.
அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கார் , வேகத்தடையில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. கார் வெடித்த இடத்தில் ஆணிகள், சிறுவர்கள் விளையாடும் கோலிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்து நடைபெற்ற பகுதியில் இன்று காலை ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரில் இருந்த இரண்டு சிலிண்டர்களில் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. சிலிண்டர் எங்கு வாங்கப்பட்டது என்று விசாரித்து வருகிறோம். இந்த மாருதி காரை இதுவரை பயன்படுத்திவந்தவர்கள் யார் யார் என்பதை தேடி வருகிறோம்.
இறந்து போன நபர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. தடயங்கள் ஒவ்வொன்றாக கிடைத்து வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. ” என்று தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வெடித்து சிதறிய கார்: விபத்தா? சதியா?
நெருங்கும் பருவமழை: மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்ட இறையன்பு!