கிச்சன் கீர்த்தனா: காலை உணவைத் தவிர்ப்பது ஆபத்தானதா?

தமிழகம்

பொதுவாக, காலை உணவைத் தவிர்ப்பது ஆபத்தானதாக மக்கள் மனங்களில் காலங்காலமாகப் பதிந்து போயிருக்கிறது. ‘ஒரு நாளில் எந்த வேளை உணவை வேண்டுமானாலும் தவிர்க்கலாம், காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. தவிர்த்தால் அந்த நாளின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்’ என்றெல்லாம் ஏராளமான கற்பிதங்கள் நம்மைச் சுற்றி வலம்வருவதுண்டு.

இந்த நிலையில் பசி இருக்கிறதோ இல்லையோ, வயிறு கேட்கிறதோ இல்லையோ, காலை உணவைத் தவிர்ப்பது தவறு என்று நினைத்து, அந்நேரத்தில் கிடைப்பதை வயிற்றில் நிரப்பிக்கொள்பவர்கள் பலர்.

உண்மையில், காலை உணவு என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? அதைத் தவிர்ப்பது ஆரோக்கியக் கேடானதா? ‘பசித்தபின் புசி’ என்பது காலை உணவு விஷயத்துக்குப் பொருந்தாதா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதில் என்ன?

“காலை உணவு சாப்பிடுவதன் மூலம் ‘மெட்டபாலிசம்’ எனப்படும் வளர்சிதை மாற்றச் செயல் தூண்டப்படுகிறது.

தூங்கி எழுந்த பிறகு சிறிது நேரத்தில் எதையும் சாப்பிடவில்லை என்றால், வளர்சிதை மாற்றச் செயல்பாடு தாமதமாகும். சாப்பிடும்வரை, உடலிலுள்ள கொழுப்பு மற்றும் ஆற்றலைப் பாதுகாக்கும்படி நம் உடலானது மூளைக்குத் தகவல் அனுப்பும்.

ஒரு நாளுக்கான மொத்தக் கலோரி தேவை என்பது நபருக்கு நபர் வேறுபடும். நாள் முழுவதும் கண்ட கண்ட நேரத்துக்குச் சாப்பிடுவது என்ற பழக்கம் தொடரும்பட்சத்தில் அது வளர்சிதை மாற்றத்தைப் பெரிய அளவில் பாதிக்கலாம்.

சரி… யாருக்குக் காலை உணவு அவசியம்? இந்தக் கேள்விக்கான பதில்… சம்பந்தப்பட்ட நபரின் வயதையும் தேவையையும் பொறுத்தது.

பள்ளிக்குச் செல்லும் குழந்தையாகவோ, கல்லூரி செல்லும் டீன் ஏஜராகவோ, கர்ப்பிணியாகவோ இருந்தால் காலை உணவைத் தவிர்ப்பது சரியானதல்ல. இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான தேவைகளுக்கு ஊட்டச்சத்துகள் அவசியம்.

அதுமட்டுமின்றி எடை குறைவான குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடலளவில் மிகவும் ஆக்டிவ்வாக வேலை செய்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவுக்குப் பிறகு மருந்து மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளோர், ரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் போன்றோர் கட்டாயம் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Is skipping breakfast dangerous?

காலையில் பெரிதாகச் சாப்பிடப் பிடிக்கவில்லை என்றாலும் புதினா சட்னி சேர்த்த சாண்ட்விச், பிரெட் ஆம்லெட், சிறுதானியக் கஞ்சி, முட்டை, காய்கறி தோசை, அவல் போன்ற ‘லைட்’டான உணவுகளைச் சாப்பிடலாம்.

அதுவே ஒரு நபர், எடைக்குறைப்பு முயற்சிக்காகக் காலை உணவைத் தவிர்க்க நினைக்கிறார் என்றால், அவர் தன்னிச்சையாக அந்த முடிவை எடுப்பது சரியாக இருக்காது. ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி, தனக்கேற்ற உணவுமுறையைத் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது சரியா, தவறா என்பது பட்டிமன்ற விவாதத்துக்குரிய விஷயம். இதில் இதுதான் சரி, இது தவறு என எதையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு தனிநபரின் தேவை, உடல்வாகு, உடலுழைப்பு, நோய் வரலாறு என அனைத்து விஷயங்களையும் பொறுத்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் இது.

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் உடல்ரீதியாக, மனரீதியாக ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் உங்கள் உடலும் மனமும் சொல்வதைக் கேட்டு நடப்பதே இந்த விஷயத்திலும் சரியாக இருக்கும்.’’ என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

அழகர் கோயில் தோசை

சண்டே ஸ்பெஷல் – ஜீரணமாவதற்கு வெந்நீர்… எந்த அளவுக்கு உண்மை?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *