முல்லைப்பெரியாறு அணையானது 130 ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக் குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரி கேரளாவைச் சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜனவரி 28) விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனுவையும் அந்த அமர்வே விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.

கேரள மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா மற்றும் பிரகாஷ் ஆகியோரும் தமிழக அரசின் கோரிக்கையை நீதிபதி முன் வைத்தனர்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜேம்ஸ் தாமஸ் ஆஜராகி, “இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தால் அணை உடைந்து விடும். ஒருவேளை அணை உடைந்தால் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக்கூடும். எனவே, தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்து புதிய அணைக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரிஷிகேஷ் ராய்,”முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து எத்தனையோ பருவமழைகள் பெய்துவிட்டன? அணை உடைந்து விடுமோ என்ற அச்சத்தில் வாழும் மாநிலத்தில் தான் நானும் ஒன்றரை ஆண்டுகள் வசித்திருக்கிறேன். ஆனால், அணை கட்டப்பட்டு 130 ஆண்டுகளை கடந்துவிட்டது.
அணையானது அதன் ஆயுளை விட 2.5 மடங்கு ஆயுட்காலத்தை கடந்து நிற்கிறது. நீதிபதி எஸ்.வி.என் பாட்டியும் நான்கரை ஆண்டுகள் கேரளாவில் வசித்துள்ளார்.
அணையை கட்டிய இன்ஜினியர்களை இந்த நேரத்தில் நான் பாராட்டுகிறேன். அணை குறித்தான மனுதாரரின் கவலை என்பது வானம் இடிந்து விழும் என்று ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம் நம்புவது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பயத்துடன் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிஷிகேஷ் ராய் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும், எஸ்.வி.என் பாட்டி நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.