மாதவிடாய் விடுமுறை: பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை என்றளவுக்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். விமானம், ராணுவம், கப்பற்படை என அனைத்திலும் பெண்களின் பங்கு உண்டு.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்கு 18 சதவிகிதம். இவ்வாறு நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். இந்நிலையில் தான் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்த பேச்சு எழுந்துள்ளது.

மாதவிடாய் காலங்களில் விடுமுறை அவசியமா? அப்படி விடுமுறை அளிக்கப்பட்டால் பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாகுபாடு காட்டப்படுமா? என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

விடுமுறை அளித்த முதல் நாடு

Is Menstrual Leave Necessary for Women

1947ல் மாதவிடாய் விடுமுறை கொள்கையை நடைமுறைப்படுத்திய முதல் நாடு ஜப்பான். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மிகப்பெரிய மக்கள் தொகையை இழந்தது. எனவே பெண்களை, அவர்களது இனப்பெருக்க வயதில் பாதுகாக்க இந்த கொள்கையை கொண்டு வந்து மீண்டும் மக்கள் தொகையை அதிகரிக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

அதைத்தொடர்ந்து தைவான், தென் கொரியா, சீனா, இந்தோனேசியா, ஜாம்பியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் மாதவிடாய் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன.

போராடி பெற்ற மாதவிடாய் விடுமுறை

இந்தியாவை பொறுத்தவரை 1992ஆம் ஆண்டு பீகார் முதல் மாநிலமாக பெண்களுக்கு 2 நாட்கள் மாதவிடாய் விடுமுறையை அளித்தது. அதுவும் பிகாரில் அப்போது பணிபுரிந்த ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

பெண்களின் கோரிக்கை தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த லாலு பிரசாத் தலைமையிலான அரசு பலமுறை ஆலோசனை நடத்தியது. 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை வைத்த நிலையில், 3 நாட்கள் எல்லாம் முடியாது, 2 நாட்கள் வேண்டுமானால் கொடுக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பிகாரில் 2 நாட்கள் மாதவிடாய் விடுமுறை கொள்கை இன்றளவும் அமலில் இருக்கிறது.

2017ஆம் ஆண்டில், அருணாச்சல பிரதேச எம்பி நினோங் எரிங், மாதவிடாயின் போது அரசு மற்றும் தனியாரில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்காக தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.

விடுமுறை கொடுக்கும் தனியார் நிறுவனங்கள்

Is Menstrual Leave Necessary for Women

ஆனால் சில தனியார் நிறுவனங்கள் பெண்களின் நலன் கருதி விடுமுறை அளித்தனர். மும்பையைச் சேர்ந்த Gozoop என்ற நிறுவனம் மாதவிடாய் நாட்களில் முதல் நாள் விடுமுறையை அளித்தது.

2020ல் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டா பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நாட்களை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 10 நாட்கள் சிறப்பு விடுமுறையை அறிவித்தது. ஸ்விக்கி மற்றும் பைஜூஸ் போன்ற பிற தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற கொள்கைகளை அறிமுகப்படுத்தின.

2023ல் கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மாதவிடாய் விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது. அதைத்தொடர்ந்து கேரளா முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

அதன்படி ஒவ்வொரு பருவத் தேர்வின் போது கட்டாய 75 சதவிகித வருகைப் பதிவில், மாணவிகளுக்கு கூடுதலாக 2 சதவிகிதம் தளர்வு அளித்தது. மாணவர்களுக்கு 75 சதவித வருகை பதிவு அவசியம் என்றால் மாணவிகளுக்கு 73 சதவிகிதம் இருந்தால் போதும் என்று தெரிவித்தது.

கொள்கை சார்ந்த விஷயம்

இது மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஷைலேந்திரா மணி திருப்பதி இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் இவ்வழக்கில் தலையிட்டு, “மாதவிடாய் நாட்களில் விடுமுறை வழங்க வேண்டும் என்று முதலாளிகளை கட்டாயப்படுத்தினால், அது பெண்களை வேலைக்கு எடுப்பதில் தடையாக அமைந்துவிடும்” என்று தெரிவித்தார்.

இதனை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கொள்கை சார்ந்த விவகாரம். பள்ளி, கல்லூரிகளில், பணியிடங்களில் பெண்களுக்கு பாகுபாடு இருக்கக்கூடாது என்று தெரிவித்தது.

இந்நிலையில் தான் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை தேவையா? என்பது பேசு பொருளாகியுள்ளது.

வீட்டிலிருந்து வேலை

இதுதொடர்பாக ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மோனிஷா நம்மிடம் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை கட்டாயம் கொடுக்க வேண்டும் தான். ஆனால் அனைவருக்கும், எல்லா மாதமும் கட்டாய விடுமுறை தேவைப்படாது.

அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களில் வலி, உடல் சோர்வு ஏற்படும் என்றில்லை. எனக்கு ஒரு மாதம் வலி, உடல் சோர்வு, வயிறு உப்பூசம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். ஆனால் ஒரு சில மாதங்களில் இந்த பிரச்சினைகள் இருக்காது. உதிரப்போக்கு இருந்தாலும் சாதாரண நாட்களில் இருப்பது போலவே இருப்பேன். அப்படிப்பட்ட சூழலில் விடுமுறை தேவைப்படாது.

உடல் வலி, இடுப்பு வலி, அதிக ரத்தம் வெளியேறுபவர்களுக்கு விடுப்பு கொடுக்கலாம். அவர்களுக்கு நிறுவனங்கள் சலுகைகள் வழங்கலாம்.

அதுபோன்று தற்போது பல கம்பெனிகளில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு தேவைப்படும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. கழிவறையில் நாப்கின் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓய்வறைகள் இருக்கின்றன.

Is Menstrual Leave Necessary for Women

என்னை பொறுத்தவரை அந்த 3 நாட்களில் பயணம் செய்வதற்குத்தான் சிரமமாக இருக்கும். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறையும் இருக்கிறது. மாதவிடாய் என்பது ஒவ்வொருவருடைய உடல் நிலையை பொறுத்தது.

அதேசமயம் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக சரிசமமாக வேலைவாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நான் பணிபுரிந்த ஒரு நிறுவனத்தில், ‘பெண்களுக்கு, கல்யாணம் ஆன பிறகு, வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, கட்டாயம் இல்லை. ஆனால் எங்களுக்கு அப்படியா? என சில ஆண் ஊழியர்கள் என்னிடம் பேசியிருக்கின்றனர். ஆனால் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறந்தும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கிறேன்.

இதுபோன்ற சூழலில் மாதவிடாய் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் அதனால் பெண்கள் வேலைக்கு செல்வதில், அவர்களை வேலைக்கு எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. மாதவிடாய் விடுமுறை கொள்கைகள் பெண்கள் சுகாதாரத்தை, பணிச் சூழலை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் ” என்றார்.

விடுமுறை கொடுத்தால் பாகுபாடு காட்டுவார்களா

வழக்கறிஞர் மணியம்மை பேசுகையில், “மாதவிடாய் விடுமுறை என்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஒரு குழந்தையை பெற்றெடுக்க தமிழக அரசு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகிறது. குழந்தையை பெற்றெடுக்க அடித்தளமாய் இருக்கும் மாதவிடாய் நாட்களின் போது ஏன் விடுமுறை வழங்கக் கூடாது?

இப்போதுதான் பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வேலைக்கு செல்கின்றனர். அதுவும் போட்டிப் போட்டுக்கொண்டுதான் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் போது வீட்டு வேலையை செய்துவிட்டு மீத நேரத்தில் ஓய்வெடுப்பார்கள். இப்போது வீட்டு வேலையையும் செய்துவிட்டு, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் விடுமுறை தேவை.

சாதாரணமாக கீழே விழுந்தாலே வலிக்கிறது என்கிறார்கள். அதுவே உள் உறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறும் போது எப்படி இருக்கும். விடுமுறை கொடுத்தால் பாகுபாடு காட்டுவார்களா? இந்த பிரச்சினையை நிறுவனங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் கருவுற அடித்தளமாய் இருக்கும் இயற்கை சார்ந்த பிரச்சினைக்கு கிடைக்கும் நிவாரணத்தை எதிர்க்கக் கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்குமே இதில் புரிதல் இருக்க வேண்டும்.

எல்லா பெண்களும் மாதவிடாய் காலங்களில் ஓய்வு எடுத்துக்கொள்வதில்லை. எடுத்துக்கொள்ளவும் முடியாது. ஒரு வழக்கறிஞராக என்னால் விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாது. வலிக்காக மாத்திரையோ, மருந்தோ எடுத்துக்கொண்டு ஓடிதான் ஆக வேண்டும்” என்றார்.

சிகிச்சை பெற உதவலாம்

மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் கூறுகையில், “விடுமுறை கொடுத்து வீட்டில் இருக்க வைத்தால் சிலர் அந்த வலியை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்கள். சிலருக்கு முழு கவனத்துடன் வேலையில் இறங்கிவிட்டால், அந்த வலி மறந்துவிடும்.

விடுமுறை கொடுத்தால் வீட்டில் இருக்கக் கூடியவர்கள் படுத்துக்கோ, ஓய்வெடு என பெண்களிடம் சொல்வதில்லை. வீட்டில் தானே இருக்கிறாய் இதை சுத்தம் செய், அதை சுத்தம் செய் என வேலை வைப்பார்கள். இதனாலேயே சில பெண்களுக்கு வீட்டில் இருக்கிறதை விட வேலைக்கு சென்றாலே நன்றாக இருக்கும் என தோன்றும்.

செஸ், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்கள் நாடு விட்டு நாடு செல்ல வேண்டியிருக்கும். ஒலிம்பிக், உலக கோப்பை உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். விடுமுறைக்கு அவர்கள் என்ன செய்வார்கள்.

அதேசமயம் மாதவிடாய் காலத்தில் எல்லா பெண்களுக்கும், எல்லா நேரத்திலும் பிரச்சினை ஏற்படாது. ஒரே வயதுடைய 100 பெண்களிடம் கேட்டாலும், மாதவிடாய் தொடர்பாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டேன் என சொல்வார்கள்.

சிலர் நான் சாதாரணமாகத்தான் இருப்பேன் என கூறுவார்கள். ஆனால் சிலர் தாங்க முடியாத வலியை எதிர்கொள்வேன், மரண வலியை எதிர்கொள்வேன் என்பார்கள்.

கருப்பை பிரச்சினை இருக்கும். மாதவிடாய் நாட்களில் தலை வலி. வயிறு இழுத்து பிடித்துக்கொள்வது, வாமிட்டிங் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். அதிக உதிரபோக்கு இருக்கும், கடுமையான கால் வலியை எதிர்கொள்வார்கள்.

அதுபோன்று அந்த சமயத்தில் எதிர்மறை சிந்தனைகள் ஏற்படும். மூட் ஸ்விங்க்ஸ் இருக்கும். மன அழுத்தமாக இருக்கும். உரிய விஷயத்தில் கவனம் செலுத்த முடியாத தடுமாற்றங்கள் இருக்கும். உணர்ச்சி மாற்றங்கள் ஏற்படும். ப்ரைன் ஃபாக் எனப்படும் குழப்பம், நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் கவனமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளையும் சந்திக்கக் கூடும். இப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பவர்களை விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம்.

ஒரு சிலருக்கு மாதத்துக்கு 2 முறை மாதவிடாய் ஏற்படலாம். சிலருக்கு இரண்டு மூன்று மாதங்கள் தாமதமாகும் அவர்களுக்கு எப்படி விடுமுறை பொருந்தும் என பல கேள்விகள் இருக்கிறது.

40 வயதை கடந்த பெண்களுக்கு ப்ரீ மெனோ பாஸ் ஆரம்பித்துவிடும். அப்போது அதிக மன அழுத்தம், அதிக மன சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்.
மாதவிடாய் விவகாரத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வளர்ச்சி நிலை இருக்கிறது. எல்லா பெண்களுக்கும் இது வித்தியாசமானது.

Is Menstrual Leave Necessary for Women

எனவே பெண்களுக்கு 3 நாள் விடுமுறை என்பது குறைந்த அளவு பலனை மட்டுமே தரும். மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதற்கு பதிலாக ஆண்களுக்கு 75சதவிகித வருகைப்பதிவு இருந்தால் பெண்களுக்கு 70 சதவிகிதம் வருகைப் பதிவு இருந்தால் போதும் என சலுகைகள் கொடுக்கலாம்.

பிசிஓடி, எண்டோமெட்ரியோசிஸ் என பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். எனவே பெண்களை வேலைக்கு பணியமர்த்தும் போதே மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதா என பிசிக்கல் ஹெல்த் படிவம் பெற்று, அதற்கேற்ப அவர்கள் சிகிச்சை பெற உதவலாம்” என்றார்.

எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் கனவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் பல உடல் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் மன அழுத்தம். கூடுதல் வேலை நேரம். நாப்கின் மாற்றக் கூட நேரம் இல்லாத அளவுக்கு வேலை. அவசர அவசரமாய் உணவருந்துதல் என வேலைக்காக வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழல் இன்றைய கார்ப்பரேட் உலகில் இருக்கிறது. இதுவே, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

எனவே 3 நாட்கள் விடுமுறை, விடுமுறை என்பதை தாண்டி இதுபோன்ற நாட்களில் பெண்களைப் புரிந்து கொண்டாலே இன்னும் சிறப்பாக வேலை செய்ய முடியும் என்கிறார்கள் அலுவலகம் செல்லும் பெண்கள்.

பெண்களின் உடலியல் தொடர்பான விவகாரம் அல்ல இது… இந்த சமுதாயத்தின், மானுடத்தின் உளவியல் சார்ந்த விஷயம். தனி நபர்கள், நிறுவனங்கள் தங்கள் வட்டத்தில் உள்ள பெண்களை புரிந்து கொண்டாலே போதும் பெண்களுக்கு!

பிரியா

பெண்களுக்கு ரூ.1000: மகளிர் தின வாழ்த்து செய்தியில் அறிவித்த முதல்வர்

தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை: அதிமுக விமர்சனம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *