கடந்த சில வாரங்களாக எந்தப் பக்கம் திரும்பினாலும் இருமல் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் ‘ரெண்டு நாளா காய்ச்சலா இருக்கு’ என்கிறார்கள்.
குழந்தைகள் சளித்தொல்லையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் லெமன் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா என்கிற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. இதற்கான பதில் என்ன?
“சளி, இருமல், காய்ச்சல் வரும்போது சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவதோ, அவற்றின் ஜூஸை குடிப்பதோ கூடாது என்றொரு நம்பிக்கை பலரிடமும் இருக்கிறது.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை சுத்தமான தண்ணீர் சேர்த்து ஜூஸாக்கி குடிக்கும்போது எந்தப் பிரச்சினையும் வராது.
இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற சிட்ரிக் பழங்கள் நம் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தக்கூடியவை.
எனவே இவற்றை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம், ஜூஸாக்கியும் குடிக்கலாம். சளி, இருமல் பாதித்தவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதோடு வெதுவெதுப்பான நீரை நிறைய குடிக்கலாம்.
சிட்ரஸ் பழங்கள் என்றாலே பலருக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி மட்டும்தான் தெரியும்.
இவை தவிர ப்ளூபெர்ரி, கிவி, அன்னாசி, பப்பாளி, கொய்யா போன்றவையும் சிட்ரிக் பழங்கள்தான். எனவே சளி, இருமல் இருக்கும்போது இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
சளி, இருமல் பாதித்த பிறகுதான் இது போன்ற வைட்டமின் சி சத்துள்ள பழங்களையோ, உணவுகளையோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.
தினமுமே அன்றாட உணவில் இந்தப் பழங்களில் ஒன்றை சாப்பிட்டு வருவது நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும்.
ஒருவேளை வைட்டமின் சி குறைபாடு உள்ளது உறுதியானால், மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் சி சப்ளிமென்ட்டுகளை, அவர் பரிந்துரைக்கும் காலத்துக்கு, அவர் குறிப்பிடும் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். காய்ச்சல் இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்” என்கிறார்கள் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர்கள்.