கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பருப்பு, கிழங்கு உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துவது உண்மையா?

Published On:

| By Minnambalam

கிழங்கு மற்றும் சன்னா போன்ற பருப்பு உணவுகளை உட்கொண்டதும் பலரும் வாயுத் தொந்தரவு ஏற்படுவதாக உணர்கிறார்கள். வேறு சிலர் அதெல்லாம் இல்லை என்கிறார்கள். உண்மையில் வாயுத் தொந்தரவுக்கும் மேற்படி உணவுகளுக்கும் தொடர்புண்டா?

உண்மையில், சன்னா எனப்படும் கொண்டைக்கடலை, ராஜ்மா, கிழங்கு வகைகள் போன்றவற்றைச் சமைக்கும் முறை என்பது முக்கியம்.

பச்சைப்பயறு, ராஜ்மா, சோயா, சன்னா என எந்தக் கடலை வகையானாலும் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடித்துவிட்டு மீண்டும் தண்ணீர் ஊற்றி வேகவைத்துதான் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் வாயுத்தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.

அடுத்ததாக சமையலுக்கு நாம் பயன்படுத்துகிற மசாலா பொருட்களும் கவனிக்கப்பட வேண்டும்.

காலிஃபிளவர், முட்டைகோஸ், சேனைக்கிழங்கு, புரொக்கோலி, சேப்பங்கிழங்கு போன்றவற்றைச் சமைக்கும்போது நிறைய பூண்டு சேர்த்துச் சமைத்தால் வாயுத் தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சிலர் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் என்பதால் தினமும் கொண்டைக்கடலை, ராஜ்மா என ஏதோ ஒன்றை சாப்பிடுவார்கள். அதுவும் தவறு.

வாரம் ஒருமுறையோ, பதினைந்து நாள்களுக்கொரு முறையோ சாப்பிட்டால் போதுமானது.

அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் அளவு குறைவாகச் சாப்பிடலாம். ஒரே ஒரு கரண்டி அல்லது அரை கப் அளவோடு நிறுத்திக்கொள்ளலாம்.

வாயுத்தொல்லை வராமலிருக்க சீரகம் அல்லது ஓமம் சேர்த்த நீர் அருந்துவது, பெருங்காயம் சேர்த்த மோர் குடிப்பது போன்றவை உதவும். தவிர அவை செரிமானத்தைச் சீராக வைக்கவும் உதவும்.

உருளைக்கிழங்கு போன்றவற்றில் உள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் காரணமாகவே அது வாயுத்தொல்லையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய உணவுகளை நாம் சாப்பிடும்போது நம் சிறுகுடலில் செரிமானமாகும்போது அவை நொதிக்க வைக்கப்படும். அந்நிலையில் வாயு உற்பத்தியாகிறது.

இத்தகைய உணவுகள் வாயுத்தொந்தரவைத் தருகின்றன என்றால் முடிந்தவரை அவற்றைத் தவிர்ப்பதும், நிறைய திரவ உணவுகள் சாப்பிடுவதும் அவசியம்.

உணவுகளை நன்கு மென்று சாப்பிட வேண்டியதும் மிக மிக முக்கியம். அவசரமாக விழுங்குவதும் நிச்சயம் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பாலக் சீஸ் பால்ஸ்

சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றதா?