சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும், நோய்கள் வராது என்ற பரவலான எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால், “சமைக்காத உணவுகள் சிறந்தவை என்ற பொதுக் கண்ணோட்டத்தில் எல்லாவிதமான உணவுகளையும் சாப்பிடுவதும் சரியானதல்ல. சமைக்காத உணவுகளைச் சாப்பிடும் முன் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
“பச்சைக் காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், நட்ஸ், சீட்ஸ், முளைகட்டிய தானியங்கள், தேங்காய்ப்பால் போன்றவற்றை சமைக்காமல் உண்ணலாம். இதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதையும் அவை ஏற்படுத்தும் ஆரோக்கியக் கேட்டையும் தவிர்க்கலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளும் தவிர்க்கப்படும். எந்த உணவையுமே பலமுறை மென்று விழுங்குவதுதான் ஆரோக்கியமானது. சமைக்காத உணவுகளைச் சாப்பிடும்போது நம்மையறியாமல் நன்கு மென்று விழுங்குவதால் செரிமான ஆரோக்கியம் மேம்படும். அதே நேரம் காய்கறி, பழங்களை நன்கு கழுவ வேண்டும். தானியங்களை ஊறவைத்து, முளைகட்டி சாப்பிட, செரிமானத்தை பாதிக்காது. இப்படி சாப்பிடும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆனால், சில வகை உணவுகளை சமைக்காமல் சாப்பிடுவது பாதுகாப்பானதல்ல. சமைப்பதன் மூலம் அவற்றிலுள்ள நச்சு ரசாயனங்கள் அழிக்கப்படும். சமைக்காத நிலையில் சில உணவுகள் நஞ்சாக மாறவும் வாய்ப்புண்டு. சமைக்காத உணவுகளைச் சாப்பிட்டதும் வயிறு உப்புசம், வாய்வுத்தொல்லை, வயிற்றைப் பிசைவது போன்ற உணர்வுகள் எல்லாம் ஏற்பட்டால் அத்தகைய உணவுகளை நிறுத்திவிடுவது நல்லது.
அல்சர், குடல் தொடர்பான நோய்கள் இருந்தாலோ, அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலோ சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவது சரியானதல்ல. சமைக்காத உணவுகளைச் சாப்பிடும்போது சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். அதாவது, வைட்டமின் பி 12, இரும்புச்சத்து, கால்சியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி, புரதச்சத்து போன்றவை குறையலாம்.
இந்த நிலையில், உங்களுடைய ரெகுலர் உணவுப்பழக்கத்தில் இடையிடையே சமைக்காத உணவுகளைச் சாப்பிடலாம். தவறில்லை. அதன் மூலம் உங்கள் உடல் கழிவுகள் வெளியேற்றப்படும். ஆனால், தொடர்ந்து அப்படியே சாப்பிட வேண்டாம். உணவு விஷயத்தில் இதுபோன்ற எந்த முயற்சியையும் தகுந்த ஆலோசகரின் மேற்பார்வையில் அவரது அறிவுரையின் பேரில்தான் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.