சென்னையில் தீபாவளிக்கு முதல் நாளான இன்று (அக்டோபர் 30) காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக தனியார் காற்று தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பட்டாசு, ஜவுளி, பேக்கரி உள்ளிட்ட கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் சென்னையில் வேலைபார்த்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். வாகனங்களில் இருந்து வெளிபடும் பெருமளவிலான புகையால் சென்னையின் காற்று தர குறியீட்டு அளவு மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
WHO சொல்வதென்ன?
மேலும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான இன்றே சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் சென்னையில் காற்று மாசுபாடு மோசமான நிலையில் உள்ளது என நியூஸ் ஆஃப் சென்னை என்ற தனியார் காற்று தர நிர்ணய அமைப்பு அறிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி காற்றின் தரக் குறியீட்டு அளவு 100 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் பாதுகாப்பான அளவு என்று கருதப்படுகிறது. அந்த அளவை தாண்டும் பொழுது காற்றின் தரம் மோசமாக இருப்பதாக அறியப்படுகிறது.
சென்னையில் தற்போது ஒட்டுமொத்தமாக 135 என்ற அளவில் உள்ளது என்றும், குறிப்பாக அரும்பாக்கத்தில் 197 என்ற அளவிலும், அபிராமபுரம், அச்சுதன் நகர் பகுதிகளில் 152 என்ற அளவிலும், பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளில் 157 என்ற அளவிலும், நீலாங்கரை பகுதிகளில் 154 என்ற அளவிலும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
இதற்கிடையே தமிழ்நாடு அரசு தரப்பில், “ தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சத்தமில்லாத, புகை இல்லாத, பாதுகாப்பான தீபாவளியை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உலக அழகிக்கு போட்டி… அபிஷேக் பச்சனை வளைத்த நடிகை என்ன சொல்கிறார்?
Comments are closed.