கிச்சன் கீர்த்தனா: தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது நல்லதா?
சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவைச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அசைவ பிரியர்களுக்கு, தினமும் ஏதாவது ஓர் அசைவ வகை உணவு இல்லாமல் போனால், ஒரு வாய் உணவுகூட உள்ளே இறங்காது.
ஆனால், மாறிவரும் வாழ்க்கை சூழலில், அசைவ உணவை கொஞ்சம் ஒதுக்கி வைப்பதே நல்லது.
இந்த நிலையில் எத்தனை நாள்களுக்கு ஒரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம்… அசைவத்தில் எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட வேண்டும்…
எத்தனை நாள்களுக்கொரு முறை பிரியாணி சாப்பிடலாம்… என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன?.
“உடல் ஆரோக்கியம், எடை, செரிமான சக்தி, குடும்பப் பின்னணியில் இதயநோய் பாதிப்பு இருப்பது, கொழுப்பு அளவு எனப் பல விஷயங்களை வைத்தே எத்தனை நாள்களுக்கொரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம் என்று முடிவு செய்ய வேண்டும்.
ஆணோ, பெண்ணோ ஒருவருக்கு வயிற்றுப் பகுதியைச் சுற்றி (அப்டாமினல் ஒபிசிட்டி) கொழுப்பு அதிகமிருந்தால், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்சினை வரும். அதாவது இன்சுலின் சுரக்க, சுரக்க உடல் அதை எடுத்துக் கொள்ளாது.
அதனால் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில டெஸ்ட்டுகள் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்க வேண்டும்.
எத்தனை நாட்களுக்கொரு முறை அசைவ உணவுகள் சாப்பிடலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் முடிவு செய்யப்பட வேண்டும்.
நடக்கும்போது மூச்சு வாங்குகிறதா, கொழுப்பு அதிகமிருக்கிறதா, ரத்த அழுத்தம் அதிகமிருக்கிறதா, உடல் பருமன் இருக்கிறதா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.
அசைவத்தில் கடல் உணவுகள் சாப்பிடலாம். கடல் உணவுகளிலும் முக்கியமாக மீன் சாப்பிடுவது நல்லது. மீன்களில் நல்ல கொழுப்பும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் இருப்பதால் அது ஆரோக்கியத்துக்கு நல்லது.
அதை வாரம் இரு முறை சாப்பிடலாம். மீன்களையும் பொரித்தோ, எண்ணெய் விட்டு வறுத்தோ சாப்பிடாமல் கிரில் செய்து சாப்பிடலாம்.
மட்டன் சாப்பிடுவது என்பது உடலின் கொழுப்புச்சத்தின் அளவை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும்.
உடலில் ஏற்கெனவே கொழுப்பு அதிகமிருந்தால், மட்டன் சாப்பிடுவதன் மூலம் அது இன்னும் அதிகரிக்கும். கொழுப்பு அதிகரித்தால் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் போன்றவற்றுக்கான ரிஸ்க் அதிகரிக்கும்.
பிரியாணிக்கும் இதே விதி பொருந்தும். சரியான எடையைத் தக்கவைத்திருக்கிறீர்கள் என்றால் வாரம் இருமுறை சாப்பிடலாம்.
அப்படி இல்லாதபட்சத்தில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
காதலை நிராகரித்ததால் சிறுமி மீது ஆசிட் வீச்சு: கர்நாடகாவில் பரபரப்பு!
டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தீர்ப்பு: எடப்பாடி, பன்னீரின் எதிர்பார்ப்பு!