வெகுஜன மக்களுக்கு பிரியாணி ஃபேவரைட் உணவாக மாறிவிட்டதால் சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமப்புறங்களிலும் பிரியாணிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.
அசைவ பிரியர்களுக்கென சிக்கன், மட்டன், இறால், மீன், முட்டை, பீஃப் பிரியாணி… சைவ பிரியர்களை ஈர்க்க காளான், காய்கறி, பனீர் பிரியாணி எனப் பட்டியல் நீள்கிறது.
விருப்ப உணவாக இருக்கும் பிரியாணியை ஹோட்டலில் வாங்கி அல்லது வீட்டில் சமைத்து மீதமாகும் பிரியாணியை பெரும்பாலானவர்கள் ஃபிரிட்ஜில் பல மணி நேரம் வைத்து மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்துள்ளது.
மீதமாகும் பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவது நல்லதா?
“பிரியாணியில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்ற சத்துகள் உள்ளன. ஒரு கப் பிரியாணியில் 300 கலோரிகள் வரை கிடைக்கும். சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டால் 20 கிராம் புரதச்சத்தும் கிடைக்கும்.
இதுபோன்ற சத்துகள் கிடைத்தாலும் பிரியாணியை அடிக்கடி அல்லது தினமும் சாப்பிடலாமா என்றால், சாப்பிடக் கூடாது என்றுதான் சொல்வோம்.
அதிக கலோரிகளை உடைய உணவான பிரியாணியை அடிக்கடி சாப்பிடுவோருக்கு உடல் பருமன் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதன் சுவை காரணமாக அளவுக்கு அதிகமாகத்தான் பெரும்பாலும் சாப்பிடுவார்கள்.
அப்படி சாப்பிடும்பட்சத்தில் அதற்கேற்றாற்போல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை.
வீட்டில் உணவுப் பொருட்கள் வீணாவதைக் குறைக்க மீதமாகும் உணவைப் பலரும் சூடுசெய்து சாப்பிடுகிறார்கள். இது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. பிரியாணி மட்டுமல்ல, வேறு எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் மீண்டும் சூடுசெய்து சாப்பிட்டால் பாதிப்புகள் வரலாம்.
ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த உணவுப் பொருட்களை இரண்டு மணி நேரத்துக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. காரணம், உணவை 140 பாரன்ஹீட் அல்லது அதற்கும் மேலான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். 40 முதல் 140 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவான சூட்டில் இருப்பதை Danger Zone என்போம்.
பிரியாணி உட்பட, எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைத்த ஒரு மணி நேரத்துக்குள் சூடுபடுத்தி சாப்பிட வேண்டும்.
நீண்ட நேரம் தாமதப்படுத்தினால் அந்த உணவு Danger Zone வெப்பநிலைக்குச் சென்றுவிடும். அந்த நேரத்தில் சூடுபடுத்தி பின்பு சாப்பிட்டால் அதில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும்.
மேலும் உணவை சூடுபண்ணும்போது அந்த உணவில் உள்ள சத்துகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. அந்த உணவில் வேதியியல் மாற்றங்கள் நடைபெறும் வாய்ப்புகளும் அதிகம். எந்த உணவையும் நேரடியாக வாணலியில் வைத்து நேரடியாக சூடு செய்து சாப்பிடுவது நல்லதல்ல.
கருகும் அளவுக்கு அதைச் சூடுபடுத்தும்போது அந்த உணவில் கார்பன் அளவு அதிகமாகும். சில உணவுப் பொருட்களை சூடுசெய்து சாப்பிடக் கூடாது. அதில் முக்கியமானது முட்டை.
முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது செரிமானக் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும், அதிலிருக்கும் புரதச்சத்தும் அழிந்துவிடும்.
அரிசியை நன்கு சமைத்த பிறகும்கூட சில பாக்டீரியாக்கள் அதனுள் இருக்கும். அதை மறுபடியும் மறுபடியும் சூடுபடுத்தும்போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிக அளவில் இருக்கும்.
இதனால் உணவு விஷமாக மாறி வாந்தி, வயிற்றுப் போக்கு, உணவு ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சூடுசெய்த உணவை பலமணி நேரம் வைத்து சாப்பிடுவதும் கேடு தரக்கூடியது.
பிரியாணியை சூடு செய்து சாப்பிடுவதாக இருந்தால், மீதமான பிரியாணியை சரியான முறையில் முன்னரே பேக்கிங் செய்து ஃபிரிட்ஜில் வைத்திருக்க வேண்டும். பின் வெளியில் எடுத்து அறை வெப்பநிலைக்கு வந்ததும் சூடுபடுத்த வேண்டும்.
மூன்று, நான்கு நிமிடங்கள் மட்டுமே சூடு செய்ய வேண்டும். இட்லி வேக வைப்பது போல ஆவியில் வைத்து சூடுபடுத்துவது நல்லது.
சூடு செய்த உடனே சாப்பிட வேண்டும். சுட வைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடக் கூடாது’’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
கிச்சன் கீர்த்தனா: ஆந்திர ஸ்டைல் சிக்கன் பிரியாணி