திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சை என்பவர், 2018 ஆம் ஆண்டு தனது மனைவி திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பொன்னம்பலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்திருந்தார்.
எனவே இழப்பீடு வழங்க நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில், பயங்கர காற்று வீசியதன் காரணமாகவே அறிவிப்பு பலகை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இது இயற்கையின் சீற்றம், மேலும் கடவுளின் செயலாகவே இருக்க வேண்டும். இதற்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பாக முடியாது என பதிலளிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி, நெடுஞ்சாலைத் துறையில் சுங்கச்சாவடியின் அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்ததற்கு கடவுளின் செயல் தான் காரணம் என கூறுவதை இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது.
மனுதாரரின் மனைவி கூலி தொழில் செய்யக்கூடியவர். எனவே அவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை உயிரிழந்த நாளிலிருந்து தற்போது வரை ஆறு சதவீதம் வட்டியுடன் வழங்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
கலை.ரா
தகவல் பலகை தரவுகள்: முதல்வர் ஆய்வு!
கோயில் நிலம் குத்தகை காலம்: 5 ஆண்டுகளாக உயர்வு!