அண்ணா பல்கலை மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு நேற்றிரவு (ஜனவரி 21) திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஞானசேகரனை 7 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக போலீஸ் துணை ஆணையர் சினேகப்பிரியா தலைமையிலான சிறப்பு விசாணைக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிந்து நேற்று இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் ஓய்வெடுக்க சிறப்பு குழுவினர் அனுமதித்தனர். ஞானசேகரனை கண்காணிக்க இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இரவில் உறங்கிக் கொண்டிருந்த ஞானசேகரனுக்கு நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கை கால்கள் இழுத்துள்ளது. இதை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், வலிப்புதான் வந்துவிட்டது என நினைத்து கையில் இரும்பு பொருளை கொடுத்தனர்.
பின்னர் முகத்தில் தண்ணீர் தெளித்து, வாயில் தண்ணீர் ஊற்றிய போது, பல்லை இறுக்கி கடித்துக்கொண்டு இருந்துள்ளான் ஞானசேகரன்.
உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஞானசேகரனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர் போலீசார்.
அவரை பரிசோத்த மருத்துவர், ‘இவருக்கு வலிப்பு வந்ததாகவோ, வருவதற்காகவோ எந்தவிதமான அறிகுறியும் இல்லை. ஆனால் அவர் நடிக்கிறார் என்று சொல்லமுடியாது. அவருக்கு வலிப்பு இல்லை என்பது மட்டும் உறுதி’ என்று கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக நாம் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,
“ஞானசேகரன் பயங்கரமான கிரிமினல். குற்றச்சம்பவத்துக்கு போகும் போது மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக செல்போனை ஏரோப்ளேன் மோடு போட்டுத்தான் எடுத்துச் செல்வான். அந்தளவுக்கு கில்லாடி.
அதுபோல எப்போது வேண்டுமானாலும் வலிப்பு வரலாம் என்பதுபோலவும், ஏற்கனவே வலிப்பு வந்து அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டது போலவும் ஒரு மருத்துவரிடம் ஞானசேகரன் மருத்துவச்சான்று வாங்கி வைத்துள்ளான். எனவே இந்த சான்றும் போலியாகத்தான் இருக்குமென கருதுகிறோம். அந்த சான்று கொடுத்த மருத்துவரிடமும் சிறப்பு விசாரணை குழு விசாரிக்க திட்டமிட்டுள்ளது” என்கிறார்கள்.