சமீபத்தில் கனடாவைச் சேர்ந்த மிச்சேல் பேர்பர்ன் என்ற பெண்,`75 ஹார்டு’ (75 Hard) என்ற தண்ணீர் சேலஞ்சில் பங்கேற்றார். இந்த சேலஞ்சின்படி, 75 நாள்களுக்குத் தொடர்ந்து தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த சேலஞ்சில் பங்கேற்ற 12-வது நாளிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்ட மிச்சேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது ஒருபுறமிருக்க… `மலச்சிக்கலா? நிறைய தண்ணீர் குடியுங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். உடல் இளைக்க வேண்டுமா? தண்ணீரோடு திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்’ – இப்படி, தண்ணீர் குடிப்பதற்காகச் சொல்லப்படும் அறிவுரைகளைக் காலங்காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். தண்ணீர் குடிப்பதை நினைவுபடுத்தும் மொபைல் ஆப் வசதியைப் பின்பற்றுவோர்கூட இங்கே இருக்கிறார்கள். `தண்ணீர் நல்லது’ என்பதுதான் காலகாலமாக நமக்குச் சொல்லப்படும் அட்வைஸ். இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? இது சரியானதா? தண்ணீர் குடிக்கும் அளவு மற்றும் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?.
“மனிதன் டையூர்னல் விலங்கு (Diurnal animal) வகையைச் சேர்ந்தவன். அதாவது, சூரியன் இருக்கும் 12 மணி நேரம் (பகல்) மட்டும் இயங்குவது போன்று படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதனும் அடக்கம். மனிதனின் உடல் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக ஒரு மில்லி சிறுநீரைப் பிரிக்கும். ஆக, ஒரு நாளுக்கு ஒன்றரை லிட்டர் சிறுநீர் பிரிக்கப்படுகிறது. இப்படி சிறுநீராக வெளியேறும் தண்ணீரை மனிதன் சமன்படுத்துவது மிக மிக அவசியம். அதனால் வெளியேறும் ஒன்றரை லிட்டர் தண்ணீருடன், கூடுதலாக அரை லிட்டர் சேர்த்து மனிதன் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
பகலில் தேவையான அளவுக்கு உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடிக்கிறவர்களுக்கு நிச்சயம் இரவில் பசிக்காது, தாகம் எடுக்காது. அதனால் நம் உடல் எவ்வளவு தண்ணீரை வெளியேற்றுகிறதோ, அதற்கேற்ப தண்ணீர் எடுத்துக்கொள்வதே போதுமானது. காலநிலைக்கு ஏற்ப ஒவ்வொருவரின் தண்ணீர்த் தேவை மாறுபடும். அனைவருக்கும் வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாகவும், மழைக்காலத்தில் தண்ணீர் குறைவாகவும் தேவைப்படும்.
அடுத்ததாக வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் வெப்பத்தன்மையுடைய உடல் கொண்டவருக்கு அதிக அளவு தண்ணீரும், ஏ.சி-யில் வேலை செய்பவர்கள் மற்றும் குளிர்ச்சி தன்மையுடைய உடல் கொண்டவருக்கு குறைந்த அளவு தண்ணீரும் தேவைப்படும். இருந்தாலும் அனைவரும் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியம்.
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, நமது உடலால் சிறுநீரை வெளியேற்ற முடியாமல் மூளையில் வீக்கம் ஏற்படும். இதற்கு `செரிபரல் எடிமா’ (Cerebral edema) என்று பெயர். இதனால் உடல் பலவீனமாகி, சில நேரம் இறப்புகூட ஏற்படலாம். அதனால் தண்ணீர் குடிக்கும்போது கவனமாக இருப்பது அவசியம். நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை சிறுநீர் மூலம் தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் மஞ்சளாக இருந்தால், தண்ணீர் போதவில்லை என்று அர்த்தம். சிறுநீர் அதிகமாக வெளியேறினால், உடலில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது என்று அர்த்தம். நான்கு மணி நேரத்துக்கு மேலும் சிறுநீர் வரவில்லை என்றால் நீங்கள் தண்ணீரே குடிக்கவில்லை என்று அர்த்தம்” என்று விளக்குகிறார்கள் பொது மருத்துவர்கள்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
இதுக்கு எந்த அம்பயர் தீர்ப்பு சொல்வாரோ?: அப்டேட் குமாரு
INDvsAUS உலகக்கோப்பை போட்டி… சேப்பாக்கில் போக்குவரத்து மாற்றம்!