ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலரின் சாய்ஸில் சூப் இருக்கும். தெருவோரங்களில் பெருகிவிட்ட சூப் கடைகளாலும் சில நிமிடங்களில் தயாரித்து அருந்தும் வகையில் இன்ஸ்டன்ட் சூப் மிக்ஸ் விற்பனைக்கு வந்த பிறகு, சூப் அருந்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
தினமும் ஒரு முறையேனும் சூப் குடித்துவிட வேண்டும்’ என்ற உணவுமுறை மாற்றத்துக்கு பெரும்பாலானோர் பழகியிருக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கு முன் பசியை அதிகரிக்க சூப் குடிப்பது, மாலை வேளையில் ஆரோக்கிய பானமாக சூப் அருந்துவது என இந்தப் பழக்கம் பலவிதமாகப் பின்பற்றப்படுகிறது. பசியின்போது சாப்பாட்டுக்கு பதில் சூப் மட்டுமே குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தினமும் சூப் குடிப்பது நல்லதா, கெட்டதா? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
“உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை அதிகம் கிடைக்கும் என்பதாலும் சமைத்து சாப்பிடும் காய்கறிகளை விடவும், சற்றே கூடுதலான பலன்களை சூப் குடிப்பதன் மூலம் பெறலாம் என்பதாலும் சூப் குடிப்பது சரிதான்.
மேலும், உடல் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருப்பவர்களுக்கு, உணவை மென்று சாப்பிடுவதில் சிக்கல்கள் இருக்கும்.
அப்படியானவர்களுக்கு, சூப் எளிமையான மற்றும் சத்தான மாற்று உணவாக இருக்கும். இவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்றி சூப் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆனால், தினமும் ரெடிமேட் சூப் நிச்சயம் நல்லதல்ல. வீட்டில் தயாரிக்கும் சூப் அளவுக்கு அவை ஆரோக்கியமானவையல்ல.
ரெடிமேட் சூப் பவுடர்களில், நறுமணத்துக்காகவும் நிறத்துக்காகவும் நிறைய பொருட்களும் நிறமிகளும் சேர்க்கப்பட்டிருக்கும். கூடவே உப்புச்சத்து, கலோரி போன்றவையும் அளவுக்கு அதிகமாகவோ / மிகக்குறைவாகவோ இருக்கும்.
ஊட்டச்சத்து, நார்ச்சத்து போன்றவற்றைத் தாண்டி கெட்ட கொழுப்புச்சத்துக்கான சேர்க்கைகளும் அதில் இருக்கலாம். என்றாவது ஒரு நாள், ஒரே ஒரு வேளை, குளிருக்கு இதமாக ஏதேனும் குடிக்க வேண்டும் போலுள்ளது என்பவர்கள் மட்டும், ரெடிமேட் சூப் குடிக்கலாம்.
எந்த வேளையில், என்ன வகை சூப்பை அருந்துகிறோம் என்ற தெளிவுடன் குடிப்பவர்களுக்கு நிச்சயம் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அந்தத் தெளிவு இல்லாமல் க்ரீமி சூப்பை உணவுக்கு முன் அருந்துவது, சௌடர் சூப் குடித்தபின் பலமான உணவு உட்கொள்வதெல்லாம் ஆரோக்கியக் கேட்டுக்கே வழிவகுக்கும்.
உடல் எடை குறைக்க வேண்டியோ, வேறு ஏதேனும் உடல் நல மாற்றங்களுக்காகவோ சூப் குடிப்பவர்கள் நிபுணர் ஆலோசனையின்றி சூப் உட்கொள்ளக் கூடாது” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…