அனைத்துப் பள்ளிகளிலும் கோ எஜுகேஷன்: எழும் புது கோரிக்கை!

தமிழகம்

கேரளாவில் 2023-24ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆண், பெண் இருபாலரும் இணைந்து பயிலும் கல்வி முறையை (co education) அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தைக் கொண்டு வருமாறு கேரள குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கல்வி, சமூக நீதி, அடிப்படை கட்டமைப்பு போன்றவற்றில் எப்போதும் மற்ற மாநிலங்களை விட ஒருபடி முன்னேறிய மாநிலமாக உள்ளது கேரளா. இந்த நிலையில் இரு பாலின மாணவர்கள் கல்விமுறை குறித்த ஒருவரின் கோரிக்கை, தற்போது பள்ளி கல்வி முறையில் புதிய சிந்தனையை உருவாக்கும் உத்தரவாக உருப்பெற்றுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஐசக் பால் என்பவர் கேரள குழந்தைகள் உரிமை ஆணையத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு மனு அளித்தார். அதில், “சமூகத்தில் பாலின சமத்துவம் அமைய வேண்டுமென்றால் பாலின பிரிவினையை ஊக்குவிக்கும் ஆண்கள் மட்டும், பெண்கள் மட்டும் என செயல்படும் தனிப் பள்ளிகளை தடை செய்ய வேண்டும். மாறாக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து படிக்கும் இணைக்கல்வி முறைக்கு மாற்ற வேண்டும். இந்த இணைக் கல்வி முறையானது மாணவர்களை மனதளவில் மட்டுமின்றி சமுதாயத்திலும் அவர்களை பக்குவபடுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆராய்ந்த கேரள குழந்தைகள் உரிமை ஆணையம் அதிரடியான உத்தரவினை நேற்று (ஜூலை 21) பிறப்பித்துள்ளது. வரும் 2023-24ஆம் கல்வியாண்டு முதல் இணைக் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தைக் கொண்டு வருமாறு முதன்மைச் செயலர், பொதுக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT) இயக்குநர் ஆகியோருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரவு கிடைத்த 90 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, உத்தரவினை அமல்படுத்துவதற்கு முன் அனைத்து பள்ளிகளிலும் ஆண்கள், பெண்களுக்கான கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டும் என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இருபாலரும் சேர்ந்து படிக்கும் இணை கல்வி குறித்த அவசியத்தை பெற்றோருக்கு உணர்த்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு கிடைத்த 90 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இணைக்கல்வி உத்தரவு குறித்து மாநில அரசுக்கும் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளையும் இணை கல்வி நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாலின மாணவர்களும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

கேரள குழந்தைகள் உரிமை ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு குறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி இன்று (ஜூலை 22) கருத்து தெரிவித்துள்ளார். “அனைத்து பள்ளிகளையும், ஆண், பெண் குழந்தைகள் படிக்கும் இணை கல்வி நிறுவனமாக மாற்றுவது தொடர்பான உத்தரவு குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் அதே வேளையில் ஒரே வருடத்தில் அனைத்து பள்ளிகளிலும் இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று” என தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் 280 பெண்கள் மற்றும் 164 ஆண்கள் பள்ளிகள் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் 18 தனி பள்ளிகள், இரு பாலர் படிக்கும் கல்வி நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளது. என்று அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த இரு பாலர் இணைக் கல்விப் பள்ளிகள் பற்றிய கோரிக்கை எழத் தொடங்கியிருக்கிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.