ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் உள்துறை செயலாளர் அமுதா உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் கடந்த 2013 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோக்களின் மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலமாகியும் தமிழகத்தில் ஆட்டோ மீட்டர்களுக்கான கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. காரணம் தமிழ்நாடுஅரசு கடந்த மே மாதம் தொழிற்சங்கங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது.
அதில் முன்னேற்றம் இல்லாததால் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அரசே ஆட்டோ செயலி தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 28) சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், ஆட்டோ-டாக்சி தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஆா்.கபாலி உள்ளிட்ட நிர்வாகிகள் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், “ஓலா, வூபர், பைக் டாக்சி போன்றவற்றால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. 1.8 கி.மீ. குறைந்தபட்ச தூரமாக கணக்கிட்டு ரூ.25-ம், அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ.-க்கும் ரூ.12 வீதம் அமைத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்தக் கட்டணம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அமையவில்லை. 8 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி உயர்த்தப்படாமல் இருப்பதால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தி அமைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட உள்துறை செயலாளர் அமுதா, மீட்டர் கட்டண உயர்வு சம்பந்தமாக முதல்வரிடம் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், “ஆட்டோ கட்டண உயர்வு, செயலி தொடங்குவது தொடர்பான கோப்புகள் முதல்வரிடம் உள்ளன. எனவே கட்டண உயர்வு, செயலி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று உள்துறை செயலாளர் உறுதியளித்துள்ளார்.
தொழிலாளர் வாரியத்தில் அனைத்து முறைசாரா தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து, செயலி கொண்டு வருவது தொடர்பாக இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர்.
எனவே, ஆட்டோவுக்கு என தனியாக செயலி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த கோரிக்கை குறித்து போக்குவரத்து தொழிலாளர் செயலாளர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உள்துறை செயலாளர் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
இதனிடையே ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் பயன்படுத்துவதில்லை. மக்கள் செல்ல வேண்டும் என்று சொல்லும் இடத்திற்கு தோராயமாக ஒரு கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இதனால் சிலர் காத்திருந்து பேருந்தில் சென்று வருகின்றனர்.
தற்போது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தினால் மேலும் கட்டணம் உயரும் என்று மக்கள் கருதுகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் பயன்படுத்துகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மோனிஷா