சாப்பிட்டு சாப்பிட்டு வீடியோ போட்டு போட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு சிலருக்கு தான் என்ன செய்கிறோம்… ஏன் இப்படி செய்கிறோம் என்கிற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் மழுங்கி போய் விட்டது என்பதையே இர்பானின் செயல் காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
நடிகர் நெப்போலியனை அமெரிக்காவில் போய் சந்திக்கிறார். நினைத்தால் ஆளுநரை போய் சந்திக்கிறார். இப்படியெல்லாம் பெரிய இடத்து தொடர்பு இருப்பதால் சட்டம் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று கருதிக் கொள்கிறார் போலும். இவர், சர்ச்சையில் சிக்குவது இது முதன் முறையல்ல.
யூடியூபர் இர்பான் பல முறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தாம்பரத்தில் இர்பானின் கார் விபத்தை ஏற்படுத்தி மூதாட்டி பலியானது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தது இர்பான்தான் என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர், டிரைவர் திடீரென ஆஜரானதாகவும் தகவல் உண்டு.
அடுத்து, தனது குழந்தை பிறப்பதற்கு முன்னதாக பாலினத்தை துபாயில் சென்று சோதனை செய்து பார்த்துள்ளார். உலகம் முழுக்க சுற்றும் ஒருவருக்கு இந்திய சட்ட திட்டங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்காது. துபாயில் சென்று மனைவிக்கு சோதனை செய்து பார்த்தவருக்கு , தன் குழந்தை பிறக்கும் முன்னரே, இந்த ஜென்டர் குழந்தை பிறக்கும் என்று வெளியே சொல்வது தப்பு என்பது தெரியாமல் இருக்குமா?
அப்போது, இந்த தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார். அது பற்றி விழிப்புணர்வு வீடியோவும் வெளியிடுவதாக அப்போது இர்பான் உறுதியளித்தார். இதை, தமிழக அரசும் ஏற்றுக் கொண்டது.
ஆனால், இப்போது அவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோதான் புது ரகமாக உள்ளது. அதாவது, பிரசவத்தின் போது, தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரி கொண்டு வெட்டிய வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இர்பானின் இந்த செயல் சுகாதாரத்துறை அமைச்சரையே கோபப்படுத்தி விட்டது. இதன் விளைவாக இப்போது, மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு கடுமையாக எச்சரித்துள்ளார். இதில், இருந்து தெரிவது என்னவென்றால் இர்பான் போன்றவர்களின் செயலுக்கு உடந்தையாக இருந்தால் அவர்களுக்கும் கேடுதான் விளையும் என்பதற்கு அவரின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரையே உதாரணமாக சொல்லலாம்.
இர்பானுக்குதான் சிறு வயது, கண்டென்ட் மைண்ட் என்றால், அந்த டாக்டருக்கு எங்கே போச்சு புத்தி என்றுதான் நெட்டிசன்கள் கேள்வி கேட்கிறார்கள். இர்பான் போன்றவர்களுடன் தொடர்பு வைத்தால், என்றோ ஒரு நாள் வீடியோ வெளியிட்டு உங்களை சந்திக்கு இழுத்து விடுவார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம் என்றும் அந்த டாக்டரை பார்த்து நெட்டிசன்கள் சிரிக்கின்றனர். இர்பான் வெளியிட்ட அந்த வீடியோ இப்போது அவரின் தளத்தில் இல்லை. நீக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மீண்டும் கார் ரேஸராக அஜித் : ஏகே ரேஸிங் அணியின் லோகோ வெளியானது!
கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக விழுந்துவிடும் : எடப்பாடி பழனிசாமி