”தனது குழந்தையின் தொப்புள் கொடியைத் துண்டித்த விவகாரத்தில் இர்பானுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கத் தமிழக அரசு வலியுறுத்தும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்டோபர் 24) தெரிவித்தார்.
பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அவரே கத்தரிக்கோலால் துண்டித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து “இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதோடு இர்பான் மற்றும் பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் டிஎம்எஸ் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் நிவேதிதா மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் மருத்துவப்பணி செய்வதற்குத் தடை விதிக்க கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம்” என மா.சுப்பிரமணியன் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை 139 வட்டத்தில்(சைதாபேட்டை மேற்கு) 250 கிலோ வோல்ட் மின்மாற்றியின் பயன்பாட்டை சுகாதாரத்துறை அமைச்சரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இர்பான் விவகாரம் குறித்த விசாரணை எந்த கட்டத்தில் இருக்கிறது என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சோழிங்கநல்லூரில் இருக்கும் மருத்துவமனையின் சேவை பத்து நாட்களுக்கு முடக்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மருத்துவமனையின் மீது ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இர்பான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் இந்தியா திரும்பியதும் தமிழக அரசு அனுப்பிய நோட்டீசுக்கு அவர் தரப்பிலிருந்து பதில் பெற்ற பின் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடரும். ” என்று மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிய காவல்துறை தயக்கம் காட்டுகிறதா என்ற கேள்விக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரிதமாகச் செயல்பட்டதன் காரணமாகத்தான் மருத்துவமனையின் மீது சட்டரீதியாக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்பான் மீதும் சட்ட ரீதியான மற்றும் துறைரீதியான நடவடிக்கை தொடரும். இந்த விவகாரத்தில் அதிகபட்சமான தண்டனை வழங்கத் தமிழக அரசு வலியுறுத்தும்” என்று அவர் பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, இறங்கிய தங்கம் விலை… பொதுமக்கள் ஆசுவாசம்!
”ஒற்றை பனைமரம்’ ரிலீசாக கூடாது” : சீமான் எச்சரிக்கை!
INDvsNZ : இன்று தொடங்கும் 2வது டெஸ்ட்… ஆபத்தில் இந்தியாவின் WTC பைனல் கனவு!