தமிழ் நாட்டின் தலைமை செயலாளராக இருந்த இறையன்பு ஓய்வு பெற்ற நிலையில், இன்று (ஜூன் 30) மாலை புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார்
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற இறையன்பு, தான் தலைமை செயலாளராக பொறுப்பேற்ற பின், பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

எனது புத்தகங்களை பரிசளிக்க வேண்டாம்
இதுவரை 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் இறையன்பு, தலைமை செயலாளர் ஆன பிறகு, “அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி எனது நூல்களை பரிசளிக்க வேண்டாம். என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ விநியோகிக்க வேண்டாம்“ என்று கூறினார்.
சாலை மேல் சாலை வேண்டாம்
சாலைகளை அமைக்கும் போதும் ஏற்கெனவே உள்ள சாலை மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பழைய சாலையை சுரண்டி எடுத்துவிட்டு அதன் பிறகு புதிய சாலையை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.

தண்டோரா வேண்டாம்
2022 ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில், அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழில்நுட்பம் பெருகிவிட்டது, இச்சூழலில் ‘தண்டோரா’ போடுவது இன்னும் தொடர வேண்டியத் தேவையில்லை. ஒலி பெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி வலம் வரச்செய்வதன் மூலம் மூலை முடுக்குகளிலெல்லாம் தகவல்களைக் கொண்டு சேர்த்திட இயலும்” என்று உத்தரவிட்டார்.
ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்றம்
சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களை கண்ணியத்துடன் நடத்தும் விதமாக, சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
ஓய்வு பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்
இப்படி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கும் இறையன்பு மாணவர்களின் நலன் கருதி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பாகக் கூட ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.
அதில், “மாணவர்கள் மின்னணு உபகரணங்களை அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், பொது அறிவு தொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாகத் தெரிவதில்லை.
வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்பொருட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் வாசிப்பது மட்டுமில்லாமல், தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு சாத்தியக்கூறுகள் ஏற்படும். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்கிற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதோடு இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களைக் கொடுத்து ஊக்குவிக்கலாம். இது, அவர்களிடம் சமூகம் தொடர்பான சிந்தனைகளையும், ஆக்கபூர்வமான விழுமியங்களையும் ஏற்படுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.
ஓய்வுக்கு பின்…
அதுபோன்று நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இறையன்பு, “ஓய்வுக்கு பின் என்ன செய்யலாம் என்று இதுவரை சிந்திக்கவில்லை. இந்த சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்ப செயல்படுவேன்” என்று கூறினார்.

இறையன்புவுக்கு வாழ்த்து
இந்நிலையில் இன்று காலை தலைமை செயலகத்துக்கு வந்த இறையன்புவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் பாராட்டு கடிதம்

தொடர்ந்து இறையன்பு முதல்வரை சந்தித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இறையன்புவுக்கு சால்வை அணிவித்து பணிப் பாராட்டு கடிதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், சக பணியாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இறையன்பு பேனாவில் கையெழுத்து

தொடர்ந்து இன்று மாலை, ஓய்வு பெறுவதையொட்டி சில ஆவணங்களில் கையெழுத்திட்ட இறையன்பு, புதிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவை தனது இருக்கையில் அமர வைத்தார்.
அப்போது இறையன்புவின் பேனாவை வாங்கி தலைமை செயலாளராக பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார் சிவதாஸ் மீனா. இதையடுத்து இறையன்பு, சிவதாஸ் மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

பிரியாவிடை
அவரை புதிய தலைமை செயலாளர் மற்றும் தலைமை செயலக ஊழியர்கள் பிரியா விடையுடன் வழி அனுப்பி வைத்தனர். காரில் ஏறும் போது இறையன்பு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கையெடுத்து கும்பிடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா
”செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்?”- அண்ணாமலை
17 வயது சிறுவன் கொலையால் பற்றி எரியும் பிரான்ஸ்