கடலூரில், இரவு நேரத்தில் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எஸ்.பி.ராஜாராமின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ளவர் ராஜாராம். இவர் தினந்தோறும் ரோந்து பணிக்குசெல்வது வழக்கம்.
அப்படித்தான் கடந்த மே 9 ஆம் தேதி இரவு கேம்ப் ஆபிஸிலிருந்து 10.15 மணிக்கு எஸ் பி ராஜாராம் ரோந்து பணிக்கு புறப்பட்டார். அவருக்கு பின்னால் ஸ்டைகிங் போர்ட்ஸ் வேனும் (அதிரடிப்படை) 50 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது.
புதுநகர் காவல் நிலையம் வழியாக முதுநகர் காவல் நிலையம் சென்று, ஐந்து நிமிடங்கள் பணியில் இருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு வடலூர் நோக்கி புறப்பட்டார் எஸ்.பி.
இரவு 11.00 மணியளவில் குறிஞ்சிப்பாடியை நெருங்கும்போது எஸ்.பி.சென்ற காரின் வேகத்தை குறைத்தார் ஓட்டுநர். உடனே என்னாச்சு என்று எஸ்.பி.ராஜாராம் கேட்க, “சார், அங்கே பாருங்கள். கூட்டமாக ரோட்டில் நின்று கொண்டிருக்கிறார்கள். விபத்து நடந்தது போல் தெரிகிறது” என்று கூறியுள்ளார் ஓட்டுநர்.
உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கிய எஸ்.பி.ராஜாராம், அங்கு சென்று பார்த்த போது இருவர் அடிபட்டு கிடந்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களிடம், என்னாச்சு என்று கேட்க,
“குடிபோதையில் எதிரெதிரே வந்து மோதிக் கொண்டு அடிப்பட்டு கிடக்கிறார்கள் சார். 20 நிமிடத்துக்கு முன்னாடியே ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லியாச்சு. ஆனால் இன்னும் ஆம்புலன்ஸ் வரல.
போன் செய்தால் இன்னும் 30 நிமிடங்கள் ஆகும் என்கிறார்கள்” என்று கூறியிருக்கின்றனர் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள்.
தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும், உடனடியாக ஸ்டைகிங் போர்ஸ் வேனில் ஏற்றுங்கள் என்று கூறி சக போலீசார் உதவியுடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார் எஸ்.பி.ராஜாராம்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஒருவரை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும், மற்றொருவரை புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார் எஸ்.பி.
இதையடுத்து விபத்து நடந்தது பற்றி போலீசார் விசாரித்துள்ளனர்.
இதில் பிரபு என்பவர் டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டு போதையில் குறிஞ்சிப்பாடியிலிருந்து ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் தோப்புக்கொள்ளை நோக்கி சென்றதும்,
எதிரே கரூரை சேர்ந்த சுஜித்ராஜ் புதுச்சேரிக்கு சென்று மது குடித்துவிட்டு புல்லட்டில் கரூர் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த போதுதான் இருவரும் மோதி விபத்து நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரையும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எஸ்பி மீண்டும் ரோந்து பணியை தொடர்ந்தார்.
அப்போது, வடலூர், கொள்ளைக்காரன் குட்டை வழியாக போகும்போது மைக்கில் போலீசாருக்கு அலரட் செய்தார்.
சாலையில் குடித்துவிட்டு டூ வீலரில் செல்பவர்களை நிறுத்தி விபத்தை தடுக்க வேண்டும். விபத்தில் இளைஞர்கள் உயிர் அநியாயமாக போகிறது.
இளம் வயதிலேயே பெண்கள் விதவையாகிறார்கள், சாலையில் யாராவது அடிப்பட்டு கிடந்தால் ஆம்புலன்ஸ்க்கு காத்திருக்க வேண்டாம், போலீஸ் நீங்களே உதவுங்கள்… உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
எஸ்.பி.ராஜாராமின் இந்த செயல் கடலூர் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
_வணங்காமுடி
ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு… மாயமானும் மண்குதிரையும்: எடப்பாடி கிண்டல்!
உண்மை வெளிவந்துவிடும் என்பதால் அமைச்சரவை மாற்றம்:எடப்பாடி