தமிழக ஆயுதப்படை சிறப்பு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தலைமை செயலாளர் முருகானந்தத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், மகேஷ் குமார் அகர்வாலை தமிழக பணியில் இருந்து விடுவித்து மத்திய பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மகேஷ் குமார் அகர்வால் மத்திய அரசு பணியில் நான்கு ஆண்டுகள் பணியாற்றுவார் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1994-ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் பணியாற்றினார். பின்னர், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அடையாறு, பூக்கடை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும் பிறகு போக்குவரத்து துணை ஆணையராகவும் பணி புரிந்தார்.
பின்னர் மத்திய அரசு பணிக்கு திரும்பிய மகேஷ் குமார் அகர்வால், 15 வருடங்களுக்கு மேல் அங்கு பணியாற்றினார்.
தொடர்ந்து, ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று, தமிழக அரசு பணிக்கு திரும்பியவர் சிபிசிஐடி ஐஜியாகவும், சென்னை காவல் ஆணையராகவும் பணியாற்றினார்.
2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது, மகேஷ் குமார் அகர்வால் நல்ல போஸ்டிங் எதிர்பார்த்தார். இதுதொடர்பாக அவர் மேலிடத்தில் கேட்டதாகவும், அவர் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கவில்லை என்றும் காவல்துறை வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
கடைசியாக ஆயுதப்படை பிரிவில் சிறப்பு டிஜிபி-யாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், மீண்டும் மத்திய அரசு பணிக்கு சொந்த விருப்பம் தெரிவித்ததால் மத்திய உள்துறை அமைச்சகம் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக மகேஷ் குமாரை நியமித்துள்ளது.
இவரை தொடர்ந்து தாம்பரம் கமிஷனராக பணியாற்றி வரும் அபின் தினேஷ் மொடாக் மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அவரும் மத்திய அரசு பணிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்டா விவசாயிகளுக்காக பெ.சண்முகம் முக்கிய கோரிக்கை!
கதிர் ஆனந்தின் அடுத்த திட்டம்! துரைமுருகன் கூப்பிட்டும் வராத நந்தகுமார் – பிறந்தநாள் பாலிடிக்ஸ்!