தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக புத்தொழில் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உலக தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று (ஜனவரி 9) நடைபெற்றது. அதில் சென்னையில் முதலீட்டாளர்களை இணைக்கும் ”குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ்” இணையதளத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கான நல்லதொரு சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய செயல்திட்டங்களை நமது அரசு பொறுப்பேற்றதில் இருந்து செயல்படுத்தி வருகிறது.
புத்தொழில் சார்ந்த செயல்பாட்டிற்கான தலைவர் அங்கீகாரத்தினை ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா அமைப்பு நமது தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டிலும் புத்தொழிலுக்கான முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடந்த ஆண்டு கிடைத்துள்ளன. இது 2021 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 70 விழுக்காடு அதிகமாகும்,
இந்தியாவில் புத்தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த விழுக்காடு கடந்த ஆண்டு எதிர்மறையாக இருந்தது.
அத்தகைய மந்தமான பொருளாதார சூழ்நிலையிலும் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்திருப்பது என்பதை காட்டுகிறது.
புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளில் மட்டுமல்ல பல்வேறு வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்பதை அண்மையில் ’இந்தியா டுடே’ ஆய்வறிக்கை கூறியதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.
தொழில்கள் நடத்துவதற்கான இலகுவான சூழலை அமைத்திருப்பதிலும் ”ease of doing” 13 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்திற்குத் தமிழ்நாட்டை நாம் மேம்படுத்தியிருக்கிறோம்.
புதுயுக தொழில்களை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் பல்வேறு முன்னோடி செயல்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கொள்கை, வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது.
பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகை தொகுப்பான அரசாணை ஒன்றும் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து துறை வளர்ச்சிகளை இலக்காக கொண்டது நமது அரசு. அதில் தொழில்துறை மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் அது பரவ வேண்டும். புத்தாக்க தொழில் அனைத்தும் சிறக்க வேண்டும்.
இதற்காக புத்தொழில் மற்றும் புத்தாக்க துறைகளும் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி ஏற்பட ஏதுவாக வட்டார புத்தொழில் மையங்கள் மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. பட்டியலினத்தவர், பழங்குடியினர் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் நடத்தும் புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யும் பொருட்டு 30 கோடி ரூபாய் நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்காக வழங்கப்படும் மானியங்களைப் பெண்களுக்கும், 2 ஆம், 3 ஆம் கட்ட நகரங்களில் இருந்து செயல்படும் நிறுவனங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.
வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் நோக்கத்தோடு 100 கோடி ரூபாய் நிதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாகக் காலநிலை மாற்றம் காரணமாக உருவாகியுள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தரும் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யும் பொருட்டு 1000 கோடி ரூபாய் பசுமை நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான
முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்களும் பெறுமளவில் பங்குபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் குறிப்பாக எல்லா தலைமுறையினரின் புத்தொழில் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் உங்கள் அனைவரையும் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இன்று நம் அரசின் டான்சிம் நிறுவனத்தின் மூலமாக குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இது உள்ளபடி எனக்கு பெருமையாக இருக்கிறது. இதன்மூலம் உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் மாநிலத்தில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமில்லாது அவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட முடியும்.
இதற்கான ஒருங்கிணைப்பு சேவைகள் அனைத்தும் டான்சிம் நிறுவனத்தால் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். இன்று தொடங்கப்படும் இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக அமெரிக்க வாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலம் 16 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டின் தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்காக முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெறும் மகிழ்ச்சியை அளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த முன்னெடுப்பில் ஈடுபட்டிருக்கக் கூடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வட அமெரிக்க வாழ் தமிழர்கள் பெருமளவில் இந்த நல்ல நோக்கத்துக்காக இங்கே நேரில் வந்து நல்ல முயற்சியைத் தொடங்கி வைத்திருப்பது நாட்டிலேயே ஒரு முன்மாதிரி திட்டம் என்று நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்கு பெற வேண்டுமாயின் இன்று நல்லதோர் விதை விதைக்கப்பட்டிருக்கிறது” என்று பேசினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மோனிஷா
ஆளுநர் உரை பழங்கதை, புதிது எதுவும் இல்லை: ஓபிஎஸ்
ஆளுநரை திரும்பப் பெறும் வரை போராட்டம்: திருமாவளவன்