TNGIM2024 : முதல்நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு!
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.5.5 இலட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 7) தொடங்கியது. மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார்.
முதல்நாளிலேயே ரிலையன்ஸ் ஜியோ, டாடா எலக்ட்ரானிக்ஸ், ஹூண்டாய், வின்ஃபாஸ்ட், டி.வி.எஸ்., பெகாட்ரான், ஜே.எஸ். டபிள்யூ, கோத்ரெஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் முதலீட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து தொழில்துறை செயலாளர் அருண்ராய் கூறுகையில், “உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே ரூ.5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முன்னணி நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
2015-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3.43 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
இன்று நடைபெற்று வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளே அதன் இலக்கான 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈட்டி உள்ளது” என அருண்ராய் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாளையும் ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி.க்கு பதவி உயர்வு!
கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவை காலிசெய்யும் அதிமுக-பாஜக….காரணம் யார்?