சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (டிசம்பர் 1) தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார்,
தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, நூலக இயக்குநர் இளம்பகவத், பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்குமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்கள் குழு பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த சந்திப்பின் போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
”தமிழ்நாட்டில் முதல் முறையாகப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. புதிய ஆட்சி அமைந்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி மற்றும் மருத்துவத்தை இரு கண்களாகப் பார்க்கின்றார்.
கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாகப் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் இரண்டு வாரம் புத்தக கண்காட்சி நடைபெறும். அதில் குறிப்பாகப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 16,17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறுகிறது.
பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்கள் நாட்டின் பெருமைகள் மற்றும் சிறந்த புத்தகங்களைக் கண்காட்சியில் வைக்கலாம்.
மேலும் புத்தகங்களைப் படிப்பதற்கான பதிப்புரிமை குறித்தும், தமிழ் இலக்கிய புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவி தொகை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
வரும் ஆண்டுகளில் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பண்பாட்டுப் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 169 நாடுகள் கலந்து கொண்டன. சர்வதேச புத்தக கண்காட்சியிலும் அதே போல கலந்து கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
மோனிஷா
வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
மெஸ்ஸியும்..! தொடரும் மிஸ்ஸிங் பெனால்டியும்..!