சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடைப்பிடித்த விரதத்தை தற்போது (ஜனவரி 1 மாலை) வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.
சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரிப் போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்யக் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 1) உத்தரவிட்டார்.
ஆனாலும் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறாமல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“6 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். 200 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தார்கள்.
இதனை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
இன்று முதல்வர் எங்களது கோரிக்கை குறித்து ஒரு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.
விரைவில் எங்களுக்கான முடிவை எட்டுவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் 6 நாட்களாக நடத்தி வந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை முதல்வருடைய வார்த்தை மற்றும் அறிக்கையின் அடிப்படையில் முடித்துக் கொள்கிறோம்” என்றனர்.
மோனிஷா