பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை, பகுதிநேர, டெட் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (அக்டோபர் 04) ஆலோசனை செய்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்,
“இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை வழங்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மாத காலத்துக்குள் இந்த குழுவின் பரிந்துரை முதல்வர் முன் சமர்ப்பிக்கப்படும்.
ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், இதனை ஏற்று அரசின் மிக முக்கியமான திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது என்பதாலும் போராட்டத்தை கைவிட்டு பயிற்சியில் சேர வேண்டும். பயிற்சி முடிந்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்கள், அனைவரும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்தது.
இவர்களில் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 பேர். இவர்கள் அனைவரும் 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்துக்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.
தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும், இந்த ஆசிரியர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதோடு இவர்கள் அனைவருக்கும் ரூ.10 லட்சம் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான தொகையை அரசே ஏற்கும். எனவே வேலைநிறுத்தத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு செல்ல வேண்டும்.
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போருக்கு, உச்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 53-ஆகவும், இதர பிரிவினருக்கு 58-ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வருதல் சார்ந்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
பொதுநூலகத் துறையில் மூன்றாம் நிலை பணியிடம் 2058ஆக உள்ளது. இதில் 446 காலி பணியிடங்கள் உள்ளன. ஊர்புற நூலகர்கள் 1530 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் 446 பேர் மூன்றாம் நிலை பணிக்கு மாற்றப்படுவர்கள்” என்று தெரிவித்தார்.
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை என மாநாட்டில் இருந்து பாதியில் அனுப்பி இந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வர சொன்னார் என்றும் கூறினார் அன்பில் மகேஷ்
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காரில் போகும் போது ரஜினிக்கு கைகாட்டிய கலைஞர்
இந்திய வீரர்களை ஏமாற்ற முயற்சி…. போராடி தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா