கைதிகளுடன் குடும்பத்தினர் பேசுவதற்காக அமைக்கப்பட்ட இண்டர்காம் அமைப்பு பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், மீண்டும் அந்த வசதி ஏற்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே சிறந்த தகவல்தொடர்பு வசதிக்காக இண்டர்காம் அமைப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை சிறை கைதிகள், அவர்களது குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் வரவேற்றனர். ஆனால் ஒருவருடம் முடிவதற்குள்ளாகவே அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது.
என்ன காரணம்?
மத்திய சிறையில் ஆண்களுக்கான இண்டர்காம் வசதி கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ளது. கடந்த நவம்பரில் அமைக்கப்பட்ட 30 யூனிட்களில் 15 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரப்பூர்வ தகவலின் படி, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சுமார் 1,000 கைதிகள் உள்ளனர். அதில் தினமும் சுமார் 100-150 கைதிகள் பார்வையாளர்கள் நேரத்தில் தங்களது குடும்பத்தினரை சந்திக்கின்றனர்.
ஆனால் இந்த பார்வையாளர்கள் நேரத்தின்போது ஏற்படும் நெரிசல் மற்றும் கூச்சலால் இண்டர்காமில் அவர்களால் சரியாக பேச முடியவில்லை. அதனால் சில இணைப்புகளை நிறுத்தி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசலை தடுக்க திட்டம்!
மேலும் பார்வையாளர்கள் நேரத்தில் ஏற்படும் நெரிசலை தடுப்பதற்காக, குற்றவாளிகளின் வருகை அட்டவணையை சிறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
அதன்படி ரிமாண்ட் கைதிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். அதே சமயம் குற்றவாளிகள் மற்றும் தமிழ்நாடு குண்டர் சட்டக் கைதிகள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
மகன் குரலை கேட்க முடியவில்லை!
வயதான பார்வையாளர் ஒருவர் கூறுகையில், “எனது மகன் ரிமாண்ட் கைதி, நான் அடிக்கடி அவரை சந்திக்க வருவேன். கூட்ட நெரிசலால், இண்டர்காம் சிஸ்டத்தை பயன்படுத்தி அவரது குரலை தெளிவாக கேட்டு வந்தேன். சமீபத்தில் சென்ற போது, இண்டர்காம் சிஸ்டம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். முதிய வயதில், என் மகனுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கவலையுடன் தெரிவித்தார்.
மேம்பட்ட வசதியுடன் இண்டர்காம்!
இதுகுறித்து பேசிய டிஐஜி ஆர் ராஜலட்சுமி, “நாங்கள் இண்டர்காம் அமைப்பை ஆய்வு செய்து முழு செயல்பாட்டை விரைவில் உறுதி செய்வோம். மேலும், பார்வையாளர்கள் மற்றும் கைதிகள் பேசும்போது ஒருவரையொருவர் கண்ணாடி பலகையில் பார்க்க அனுமதிக்கும் புதிய இண்டர்காம் உள்கட்டமைப்பை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் அது அமைக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Asia Cup: ’மேட்ச் பிக்சிங் செய்த இந்திய அணி..?’ அக்தர் ஆத்திரம்!
ஒரே வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல்!