குளிர்காலத்தில் சட்டென சமைத்துச் சாப்பிடக்கூடிய, அதேசமயம் சமைக்கிற உணவு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த இன்ஸ்டன்ட் மசாலா சேவை உதவும்.
என்ன தேவை?
இன்ஸ்டன்ட் இடியாப்பம் – 2 கப்
பச்சைப் பட்டாணி, கேரட், குடமிளகாய் கலவை – அரை கப்
சாம்பார் பவுடர் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கடுகு – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
இன்ஸ்டன்ட் இடியாப்பத்தை வேகவைத்து, தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். பச்சை பட்டானியை குக்கரில் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரை வேகவைத்து தண்ணீர் வடித்து கொள்ளவும்.
வெங்காயம், குடமிளகாய், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில், கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். அடுத்து, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து, காய்கறிகள் முக்கால் பதம் வரை, அடிப்பிடிக்காமல் வேக விடவும்.
தொடர்ந்து, கரம் மசாலா, இடியாப்பம் ஆகியவற்றைச் சேர்த்து, உடைந்து விடாமல் மென்மையாகக் கிளறி, தீயைக் குறைத்து 2 நிமிடங்கள் வேக விடவும். இறக்கும் முன்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து, லேசாக கிளறி இறக்கிப் பரிமாறவும்.